சினிமா தியேட்டர் அருகே போதைப்பொருள் விற்பனை: நைஜீரிய ஆசாமிகள் கைது
சென்னையில் சினிமா தியேட்டர் அருகே போதைப்பொருள் விற்பனை செய்த நைஜீரிய ஆசாமிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.;
சென்னை,
சென்னையில் சினிமா தியேட்டருக்கு படம் பார்க்கவரும் ரசிகர்களிடம் ஒரு கும்பல் போதைப்பொருள் விற்பதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மத்திய போதைப்பொருள் சென்னை மண்டல இயக்குனர் அரவிந்தன் உத்தரவின் பேரில், சென்னையில் உள்ள சில சினிமா தியேட்டர்கள் அருகில் போலீசார் மாறுவேடத்தில் கண்காணித்தனர்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள சினிமா தியேட்டர் அருகில் 2 நைஜீரிய ஆசாமிகள் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்தனர். அவர்களை மடக்கிப்பிடித்து மாறுவேட போலீசார் சோதனை போட்டனர்.
போதைப்பொருள் பறிமுதல்
அவர்களிடம் விலை உயர்ந்த கோகையின் போதைப்பொருள் இருப்பது தெரிய வந்தது. 78 கிராம் கோகையின் போதைப்பொருளும், 10 கிராம் சாரஸ் மற்றும் 30 பிளாட்டுகள் எல்.எஸ்.டி. வகை போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டது. நைஜீரிய ஆசாமிகள் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போதைப்பொருள் வாங்க வந்த சென்னை ஆசாமி ஒருவரும் கைதானார். அவர் சினிமாப்படம் பார்க்க வந்தவர்போல வந்து, போதைப்பொருளை வாங்க முற்பட்டார். அப்போது போலீசாரிடம் மாட்டிக்கொண்டார்.
நைஜீரிய நபர்கள் மேற்கண்ட போதைப்பொருளை பெங்களூருவில் இருந்து வாங்கி வந்து, சென்னையில் சில்லரை விற்பனையில் ஈடுபட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிவித்தனர். கைதான 3 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.