குற்றாலத்தில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை-சுற்றுலா பயணிகள் உற்சாகம்
குற்றாலத்தில் நேற்று குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. இதனால் அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்துச் சென்றனர்.
தென்காசி,
குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. இடையே 2 நாட்கள் மெயின் அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தற்போது நீர்வரத்து குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
நேற்று முன்தினம் குற்றாலத்தில் வெயில் அடித்தது. நேற்று குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை விட்டு விட்டு தூறியது. குளிர்ந்த காற்று வேகமாக வீசியது. இதனால் ரம்மியமான சூழல் ஏற்பட்டது. ஆனால் குற்றாலத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள தென்காசியில் சாரல் மழை இல்லை.
தென்காசியில் நேற்று காலையில் இருந்தே வெயில் அடித்தது. குளிர்ந்த காற்று வீசியது. குற்றாலத்தில் சாரல் மழையுடன் குளிர்ச்சியான சூழல் நிலவியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளதால் குற்றாலத்துக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. கூட்டம் இல்லாததால் அங்கு வந்தவர்கள் அனைத்து அருவிகளிலும் உற்சாகமாக குளித்துச் சென்றனர். விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.