கஞ்சா போதையில் ஆட்டோ ஓட்டி மக்களை அச்சுறுத்தும் நபர்கள்

தேனி நகரில் மது, கஞ்சா போதையில் ஆட்டோ ஓட்டும் சிலர் மக்களை அச்சுறுத்துவதாக கலெக்டரிடம் ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தினர் புகார் மனு கொடுத்தனர்.;

Update:2023-07-25 01:30 IST

குறைதீர்க்கும் கூட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

அதன்படி, தேனி மாவட்ட சாலையோர வணிகர்கள் மற்றும் தொழிலாளர் முன்னேற்ற நலச்சங்க தலைவர் நாகராஜ் தலைமையில் சாலையோர வியாபாரிகள், கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில், "தேனி மாவட்டத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். சாலையோர வியாபாரிகளுக்கு ஆணைக்குழு அமைக்க வேண்டும். மத்திய அரசு திட்டங்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

ஆட்டோ டிரைவர்கள்

தேனி ஆட்டோ டிரைவர்கள் நலச்சங்க தலைவர் சசிக்குமார் தலைமையில் ஆட்டோ டிரைவர்கள் கொடுத்த மனுவில், "நாங்கள் தேனி பழைய பஸ் நிலைய நுழைவு வாயிலில் 30 ஆண்டுகளுக்கு மேல் சங்கம் அமைத்து, பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்த பாதிப்பும் இன்றி ஆட்டோ ஓட்டி வருகிறோம். ஆனால், சமீப காலமாக தேனி நகர் பகுதியை தவிர்த்து பெரியகுளம், ஆண்டிப்பட்டி உள்பட பல இடங்களில் இருந்து தேனிக்குள் ஆட்டோ ஓட்டும் பலர் விதிகளை பின்பற்றுவது இல்லை. முறையாக சீருடை அணியாமல், சாதிய அடையாளத்துடன் கொடிகள் கட்டிக்கொள்கின்றனர். ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், முறையான ஆவணங்கள் இல்லாமலும் ஆட்டோ ஓட்டுகின்றனர். சிலர் மது, கஞ்சா போதையில் ஆட்டோ ஓட்டுவதோடு, மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர். எங்கள் ஆட்டோ நிறுத்தம் அருகிலும் நிறுத்துவதால் எங்களின் வாழ்வாதாரமும் பாதிக்கிறது. இதுதொடர்பாக தேனி போக்குவரத்து போலீஸ் நிலையம், போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தும் தீர்வு இல்லை. எனவே, தேனி நகரில் ஆட்டோக்கள் இயங்குவதை முறைப்படுத்த வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

தேனி பஞ்சமி நிலம் மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் தலைமையில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், "வடவீரநாயக்கன்பட்டியில் பஞ்சமி நிலத்தை மீட்டு நிலம் இல்லாத மக்களுக்கு வழங்க வேண்டும். பஞ்சமி நிலத்தை பத்திரப்பதிவு செய்ய ஐகோர்ட்டு தடை விதித்துள்ள போதிலும், பத்திரப்பதிவு செய்த சார்பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்