சென்னையில் மாநகர பஸ்சுக்குள் டிரைவர்கள்- கண்டக்டர் பயங்கர மோதல்
இந்த சம்பவம் குறித்து போக்குவரத்துத்துறை அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை கொரட்டூரில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் மாநகர பஸ்(தடம் எண் 70) கோயம்பேடு பஸ் நிலையத்தை வந்தடைந்தது. பஸ்சை டிரைவர் சிவானந்தம் ஓட்டினார். பஸ் நிலையத்துக்குள் பயணிகள் இறங்கியதும், முன்னால் நின்ற மற்றொரு மாநகர பஸ்சை எடுத்து வழிவிடுமாறு டிரைவர் சிவானந்தம் கூறினார்.
ஆனால் அந்த மாநகர பஸ்சின் டிரைவர் புண்ணியமூர்த்தி, பஸ்சை எடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே சிவானந்தம், எதுவாக இருந்தாலும் பஸ்சுக்குள் வந்து பேசும்படி கூறினார்.
ஆத்திரமடைந்த புண்ணியமூர்த்தி, அந்த பஸ்சின் கண்டக்டர் பாலகுமார் இருவரும் பஸ்சுக்குள் ஏறியவுடன் சிவானந்தம் பஸ்சின் தானியங்கி கதவை மூடிவிட்டு அங்கிருந்து பஸ்சை எடுத்தார். அதிர்ச்சிஅடைந்த புண்ணியமூர்த்தி, பாலகுமார் இருவரும் பஸ்சை நிறுத்தும்படி கூறினர். ஆனால் சிவானந்தம் கேட்காமல் தொடர்ந்து பஸ்சை இயக்கினார். இதனால் டிரைவர்கள் இடையே வாக்குவாதம் முற்றியது. மேலும் புண்ணியமூர்த்தி பஸ்சில் இருந்த கியர் ராடை பிடித்து இழுத்து பஸ்சை நிறுத்த முயன்றார். ஆனால் சிவானந்தம் விடாப்பிடியாக பஸ்சை நிறுத்த மறுத்தார்.
இதனால் மேலும் ஆத்திரமடைந்த டிரைவர் புண்ணியமூர்த்தி மற்றும் கண்டக்டர் பாலகுமார் இருவரும் சேர்ந்து டிரைவர் சிவானந்தத்தை சரமாரியாக அடித்து உதைத்தனர். கண்டக்டர் பாலகுமார், பஸ்சின் கம்பியை பிடித்து தொங்கியபடி சிவானந்தத்தை காலால் எட்டி உதைத்தார்.
பஸ்சுக்குள் பயணிகள் கண் முன்பே மாநகர பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர் ஆகியோர் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதனால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஒருவழியாக அவர்களுக்குள் மோதல் முடிவுக்கு வந்தது. பஸ்சின் தானியங்கி கதவை திறந்து டிரைவர் புண்ணியமூர்த்தி, கண்டக்டர் பாலகுமார் இருவரும் கீழே இறங்கி சென்றுவிட்டனர்.
மாநகர பஸ் டிரைவரை மற்றொரு பஸ்சின் டிரைவர், கண்டக்டர் சேர்ந்து தாக்குவதை அந்த பஸ்சின் கண்டக்டர் தனது செல்போனில் வீடியோ எடுத்தார். அந்த வீடியோ காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து துறை அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.