இளம்பெண்ணுடன் டிரைவர் காதல்: தனியார் பஸ்சை சிறைபிடித்த உறவினர்கள்

ஆலங்குடி அருகே இளம்பெண்ணை பஸ் டிரைவர் வீட்டில் இருந்து அழைத்து சென்றதால் ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள் தனியார் பஸ்சை சிறை பிடித்தனர்.

Update: 2023-07-07 18:30 GMT

காதல்

புதுக்கோட்டை மாவட்டம் கல்லாலங்குடி மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் தேவா (வயது 30). இவர் தனியார் பஸ்சில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் ஆலங்குடி அருகே மேலாத்தூரை சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணை தேவா காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அந்த பெண்ணை அவரது வீட்டில் இருந்து தேவா நேற்று முன்தினம் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து அந்த பெண்ணின் பெற்றோர் வடகாடு போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பஸ் சிறைபிடிப்பு

இந்தநிலையில் வெட்டன்விடுதியில் இருந்து ஆலங்குடி வழியாக புதுக்கோட்டை செல்லும் தனியார் பஸ்சை தேவா ஓட்டி செல்வதாக இளம்பெண்ணின் உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர்கள் கே.ராசிமங்கலம் ஆர்ச் பகுதியில் ஆலங்குடி- கறம்பக்குடி சாலையில் பஸ்சை சிறை பிடித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்