முத்துப்பேட்டை 4-வது வார்டு கருமாரியம்மன் கோவில் தெருவில் வடி வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் மீது மினி பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலம் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. நேற்று தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் இருந்து செம்மண் ஏற்றி வந்த லாரி இந்த பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, பாலம் திடீரென உடைத்து உள்வாங்கியது. இதில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் லாரியை ஓட்டி வந்த தர்மபுரி மாவட்டம் நெய்வேலியை சேர்ந்த சந்திரபோஷ் (வயது37) என்பவர் படுகாயம் அடைந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் லாரி டிரைவரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கவிழ்ந்த லாரி கிரேன் மூலம் மீட்கப்பட்டது.