தோட்டத்தில் பிணமாக கிடந்த டிரைவர்
உவரி அருகே தோட்டத்தில் டிரைவர் பிணமாக கிடந்தார்.
திசையன்விளை:
சாத்தான்குளம் முதலூர் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 34). லோடு ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 12-ந் தேதி நாகர்கோவிலுக்கு லோடு ஆட்டோவில் செல்வதாக அவரது மனைவியிடம் கூறி சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனில் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் என்று வந்தது. இதுபற்றி அவரது மனைவி கிரேஸ்லெட், தட்டார்மடம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அவரை தேடி வந்தனர்.
இந்தநிலையில் உவரியை அடுத்த குட்டம் - புத்தன்தருவை சாலையில் உள்ள ஒரு தோட்டத்தில் முத்துராஜ் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அவரது மனைவி உவரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சகாய சாந்தி வழக்குப்பதிவு செய்து அவர் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.