எரிபொருள் சிக்கனம்; அரசு பஸ் டிரைவர், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு பரிசு-போக்குவரத்து கழகம் சார்பில் வழங்கப்பட்டது
நாமக்கல்:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இணைந்து நாமக்கல் கிளை-1, கிளை-2 மற்றும் ராசிபுரம், திருச்செங்கோடு, சங்ககிரி கிளைகளில் எரிபொருள் சிக்கனம் வழங்கிய டிரைவர்களுக்கும் மற்றும் சிறப்பாக பஸ் பராமரிப்பு பணியினை மேற்கொண்ட தொழில்நுட்ப பணியாளர்களுக்கும் பரிசு வழங்கி கவுரவிக்கும் விழா நாமக்கல் கிளை வளாகத்தில் நடத்தின.
விழாவுக்கு அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி தலைமை தாங்கி சிறப்பாக பணியாற்றிய டிரைவர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு பரிசு வழங்கி கவுரவித்தார். பொது மேலாளர்கள் லஷ்மண், ரவி லட்சுமணன் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் விற்பனை மேலாளர் விஜய்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் துணை மேலாளர்கள் ராஜேந்திரன் (தொழில் நுட்பம்), அருள் முருகன் (பொருட்கள்), ராஜா (பணி), நாமக்கல் கோட்ட மேலாளர் சுரேஷ்பாபு, கிளை மேலாளர்கள், அனைத்து பிரிவு பணியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.