மனைவிக்கு ஸ்கூட்டர் ஓட்டபயிற்சி அளித்த பெயிண்டர் சாவு

திருவேங்கடம் அருகே மனைவிக்கு ஸ்கூட்டர் ஓட்ட பயிற்சி அளித்த போது ஓடையில் கவிழ்ந்ததால் பெயிண்டர் பலியானார்.

Update: 2023-08-17 19:40 GMT

திருவேங்கடம்:

திருவேங்கடம் அருகே மனைவிக்கு ஸ்கூட்டர் ஓட்ட பயிற்சி அளித்த போது ஓடையில் கவிழ்ந்ததால் பெயிண்டர் பலியானார்.

பெயிண்டர்

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே குருவிகுளம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் தங்கமுத்து. இவருடைய மகன் தங்கராஜ் (வயது 35). பெயிண்டர். இவருடைய மனைவி இதயகுமாரி (32). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இதயகுமாரி தனக்கு ஸ்கூட்டர் ஓட்ட கற்று தருமாறு கணவர் தங்கராஜிடம் கேட்டார். இதையடுத்து நேற்று முன்தினம் ஸ்கூட்டரின் பின்பக்க இருக்கையில் தங்கராஜ் அமர்ந்து கொண்டு மனைவி இதயகுமாரிக்கு ஸ்கூட்டர் ஓட்ட பயிற்சி அளித்தார்.

ஓடையில் கவிழ்ந்தது

அவர்கள் 2 பேரும் ஸ்கூட்டரில், குருவிகுளம்- ராமலிங்கபுரம் சாலையில் நைனாம்பட்டி விலக்கு பகுதியில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக சாலையோர ஓடையில் ஸ்கூட்டர் கவிழ்ந்தது.

சுமார் 15 அடி ஆழ பள்ளத்துக்குள் ஸ்கூட்டர் பாய்ந்ததில் தங்கராஜ், இதயகுமாரி ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்தனர்.

சாவு

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குருவிகுளம் போலீசார் விரைந்து சென்று, படுகாயமடைந்த தங்கராஜ், இதயகுமாரி ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே தங்கராஜ் பரிதாபமாக இறந்தார். இதயகுமாரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்