லாரி மூலம் வீடு தேடிவரும் குடிநீர்

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையாக இருக்கும் இடங்களுக்கு லாரி மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2023-03-16 18:45 GMT

கோவை

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையாக இருக்கும் இடங்களுக்கு லாரி மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குடிநீர் திட்டம்

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கு உட்பட்ட பகுதியில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு மாநகராட்சி மூலம் சிறுவாணி, பில்லூர் 1 மற்றும் 2, ஆழியாறு, கவுண்டம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டம் ஆகிய திட்டங்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சிறுவாணி அணையில் திருப்திகரமாக தண்ணீர் இருந்த நேரம் வரை மாநகர பகுதியில் பெரும்பாலான இடங்களில் 3 நாட்களுக்கு ஒருமுறையும், பிற பகுதிகளுக்கு வாரத்துக்கு ஒருமுறையும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

பொதுமக்கள் போராட்டம்

தற்போது சிறுவாணி அணையின் நீர்மட்டம் 13 அடியாக குறைந்துவிட்டதால் சில பகுதிகளில் வாரத்தில் ஒரு நாளும், சில பகுதிகளுக்கு 10 நாட்களுக்கு ஒருமுறையும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் கடந்த வாரத்தில் மட்டும் மாநகர பகுதியில் 2 இடங்களில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எனவே பற்றாக்குறை ஏற்படும் பகுதியில் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் மாநகராட்சி சார்பில் வழங்கப்படும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

லாரி மூலம் குடிநீர்

கோவை மாநகர பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் இடங்கள் எவை.. எவை.. என்று கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அந்த பகுதிகளுக்கு குறைந்தது 10 நாட்களுக்கு ஒருமுறை லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும். இதற்காக லாரிகள் தயாராக நிறுத்தப்பட்டு உள்ளது.

எனவே எந்த பகுதியிலாவது குடிநீர் வரவில்லை என்றால் உடனடியாக அந்தப்பகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். உடனடியாக தண்ணீர் வினியோகம் செய்யப்படும்.

மேலும் பில்லூர் 3-வது குடிநீர் திட்ட பணிகள் வருகிற மே மாதத்துக்குள் முடிந்து விடும். அந்த திட்டம் பயன்பாட்டுக்கு வந்துவிட்டால் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது. அந்த திட்ட பணிகளை விரைவில் முடிக்க பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்