இளம்பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை
ராமநாதபுரம் அருகே இளம்பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை செய்ததாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவை பகுதியை சேர்ந்தவர் பூசைத்துரை என்பவரின் மகன் விக்னேஷ் (வயது 32). இவருக்கும் மொட்டையன்வலசையை சேர்ந்த கோபால் மகள் சதீஸ்வரி (27) என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. திருமணத்தின்போது சதீஸ்வரிக்கு 135 பவுன் தங்க நகையும், விக்னேசிற்கு 15 பவுன் தங்க நகையும் மற்றும் ரூ.5 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்களும் வரதட்சணையாக கொடுத்தார்களாம். திருமணம் முடிந்த அன்று இரவே சதீஸ்வரியின் நகைகளை வாங்கி எடைபோட்டு பார்த்து 200 பவுனுக்கு 150 பவுன் தங்க நகையும், ரூ.10 லட்சம் கேட்டதற்கு ரூ.5 லட்சம் பொருட்கள் தான் வரதட்சணையாக கொடுத்துள்ளனர் என்று கேட்டு மிரட்டினார்களாம். இதற்கு விக்னேஷ் மற்றும் அவரின் குடும்பத்தினர் உடந்தையாக இருந்தார்களாம். மீதம் உள்ள நகை பணத்தை கேட்டு கொடுமைபடுத்தினார்களாம். இதுகுறித்து சதீஸ்வரி ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.