வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; பேரூராட்சி துப்புரவு பணியாளர் பலி
வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பேரூராட்சி துப்புரவு பணியாளர் பலியானார்.;
பட்டிவீரன்பட்டி அருகே உள்ள எம்.வாடிப்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (வயது 42). இவர், சேவுகம்பட்டி பேரூராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றினார். நேற்று இவர், தனது மனைவி பாண்டியம்மாளுடன் வத்தலக்குண்டு-திண்டுக்கல் மெயின்ரோட்டில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
பட்டிவீரன்பட்டி அருகே ஒட்டுப்பட்டி பிரிவில் வந்தபோது, அங்கு பழுதாகி நின்றுகொண்டிருந்த வேனின் பின்புறத்தில் மோட்டார்சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காயம் அடைந்த பாண்டியம்மாளை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.