மின்வேலியில் சிக்கி 2 பேர் இறந்த வழக்கில் தந்தை-மகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை; அரியலூர் கோர்ட்டு தீர்ப்பு

மின்வேலியில் சிக்கி 2 பேர் இறந்த வழக்கில் தந்தை-மகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Update: 2023-08-18 19:21 GMT

தாமரைக்குளம்:

ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலத்தை அடுத்த சாத்தம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம்(வயது 95). விவசாயி. இவரது மகன் தங்கராசு(60). இவர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவர்கள் 2 பேரும் கடந்த 2017-ம் ஆண்டு, கொள்ளிடம் ஆற்றுப்படுகை பகுதியில் உள்ள தங்களது விவசாய நிலத்தில் கத்தரி, முருங்கை சாகுபடி செய்திருந்தனர்.

இந்நிலையில் தந்தையும், மகனும் கடந்த 7.9.2017 அன்று கால்நடைகளுக்கு தீவனம் சேகரிக்க சென்றனர். அப்போது அங்குள்ள நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி, மின்சாரம் பாய்ந்து 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தங்கராசுவின் மகன் தமிழரசன் (33) அளித்த புகாரின்பேரில் விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அனுமதியின்றி மின்வேலி

விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த தேவேந்திரனின்(52) வயலில் சோளப்பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதை கட்டுப்படுத்துவதற்காக வேலாயுதம் நிலத்தில் உள்ள மின் மோட்டாரில் இருந்து அனுமதியின்றி கட்டுக்கம்பி மூலம் தனது நிலத்தில் அமைத்திருந்த மின்வேலியில் மின் இணைப்பு கொடுத்திருந்ததும், அதில் சிக்கி வேலாயுதமும், தங்கராசுவும் இறந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அனுமதியின்றி மின்வேலி அமைத்ததாக தேவேந்திரன், அவரது மகன் பிரபாகரன் (25), மின்வேலி அமைக்க உடந்தையாக இருந்ததாக அதே கிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி மகன் சுரேஷ், ஆறுமுகம் மகன் சுரேஷ் ஆகியோரை கைது செய்தனர்.

இரட்டை ஆயுள் தண்டனை

இந்த வழக்கு அரியலூர் மாவட்ட கூடுதல் மற்றும் அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கர்ணன் நேற்று தீர்ப்பு கூறினார். அதில், அனுமதியின்றி மின்வேலி அமைத்த தேவேந்திரன், பிரபாகரன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும் மற்ற 2 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து கோர்ட்டில் இருந்து தேவேந்திரன், பிரபாகரன் ஆகியோரை போலீசார் வெளியே அழைத்து வந்தனர். அப்போது அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கதறி அழுதனர். பின்னர் 2 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் அடைக்க அழைத்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்