வீடு, வீடாக சென்று வட்ட வழங்கல் துறையினர் விளக்கம்

நிலக்கோட்டை அருகே செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து வீடு, வீடாக சென்று வட்ட வழங்கல் துறையினர் விளக்கம் அளித்தனர்.

Update: 2023-10-19 22:00 GMT

நிலக்கோட்டை அருகே உள்ள எத்திலோடு ஊராட்சி பகுதியில் வினியோகம் செய்யப்பட்ட ரேஷன் அரிசி தண்ணீரில் போட்டவுடன் மிதந்ததால், அது பிளாஸ்டிக் அரிசி எனக்கூறி கிராம மக்கள் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் எதிரொலியாக, நிலக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலர் தங்கேஸ்வரி தலைமையிலான அதிகாரிகள் எத்திலோடு கிராமத்தில் வீடு, வீடாக சென்று மக்களுக்கு விளக்கம் அளித்தனர். ரேஷன் கடையில் வினியோகம் செய்தது பிளாஸ்டிக் அரிசி இல்லை என்றும், அவை செறிவூட்டப்பட்ட அரிசி என்றும் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.

மேலும் அந்த அரிசியை தண்ணீரில் போட்டால் சிறிதுநேரத்தில் கரைந்து விடும் என்றும், அதில் சத்துக்கள் நிறைந்து இருப்பதாகவும் கூறினர். அதனை பொதுமக்கள் பயப்படாமல் சாப்பிடலாம் என்று அறிவுறுத்தினர். செறிவூட்டப்பட்ட அரிசி குறித்த கிராம மக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, வட்ட வழங்கல் அலுவலர் பதில் அளித்தார். ஆய்வின்போது தனி வருவாய் ஆய்வாளர் சரவணமுத்து, ரேஷன் கடை ஊழியர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்