கவர்னர் விஷமத்தனங்களில் ஈடுபட வேண்டாம்; முரசொலி கடுமையாக விமர்சனம்
தமிழகத்தில் சனாதனம், வர்ணாசிரமம் எனும் விஷச்செடிகளை வளர்க்க எண்ணி, விஷமத்தனங்களில் கவர்னர் ஈடுபட வேண்டாம் என முரசொலி கடுமையாக விமர்சித்துள்ளது.
சென்னை,
தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் வெளியாகியுள்ள விமர்சன கட்டுரையில், தமிழ்நாடு எத்தனையோ ஆளுநர்களை பார்த்துள்ளதாகவும், சில ஆளுநர்கள் விமர்சனத்துக்கும் ஆளாகியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போதைய ஆளுநர், ஆடு திருடிய திருடன்போல், அகப்பட்டு முழிக்கிறார் என்றும் ஏன் அதிகார வரம்புகளை மீறி, ஆளுநர் கடிதங்கள் அனுப்புகிறார் என்ற கேள்வி எழுவது நியாயமானது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
பெரியார், அண்ணா, கருணாநிதியால் பதப்படுத்தப்பட்ட மண் தமிழ்நாட்டு மண் என்றும், இங்கே சனாதனம், வர்ணாசிரமம் எனும் விஷ செடிகளை வளர்க்க எண்ணி விஷமத்தனங்களில் ஈடுபட வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி, குற்ற வழக்குகளை எதிர்கொண்டு, நீதிமன்ற காவலில் உள்ள நிலையில், தொடர்ந்து அவர் மந்திரி சபையில் நீடிக்க தமிழக கவர்னர் ஆர்.என். ரவி ஒப்பு கொள்ளவில்லை.
அவர் வகித்து வந்த இலாகாக்களை மந்திரிகள் தங்கம் தென்னரசு, முத்துசாமிக்கு கூடுதலாக ஒதுக்க அனுமதி அளித்து உள்ளார். ஆனால், செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க கவர்னர் ரவி ஒப்புதல் அளிக்கவில்லை. இதற்கு முன், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கவர்னர் ரவி எழுதிய கடிதமொன்றில், மந்திரி சபையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கும்படி தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில், அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்காமல், இலாகா இல்லாத அமைச்சராக அவர் நீடிப்பார் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.