வனங்களை பாதுகாக்க அக்கறை இல்லையா? மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
அன்னிய மரங்களை அகற்ற கோரிய வழக்கில், தங்கள் விருப்பம் போல விளக்கம் தரலாமா? வனங்களை பாதுகாக்க அக்கறை இல்லையா? என்று மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு சரமாரியாக கேள்விகள் எழுப்பி உள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் வனப்பகுதியில் பரவியுள்ள அன்னிய மரங்களை அப்புறப்படுத்த கோரிய வழக்கை ஐகோர்ட்டு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்சு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையின்போது, அன்னிய மரங்களை அப்புறப்படுத்த தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்ட நிதியை பயன்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.
இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என கூறி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
மேல்முறையீடு
அப்போது, மத்திய அரசின் சார்பு செயலாளரும், தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித்துறை செயலாளரும் ஆஜராகியிருந்தனர். தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்ட சட்டத்தில் கூறப்பட்டுள்ள 266 பணிகளில் மரங்களை அகற்றும் பணி சேர்க்கப்படவில்லை. அதனால், ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. இதுசம்பந்தமாக விரிவான மனுவை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், "தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்ட சட்டத்தில் வன வளர்ப்பு பணிகளுக்கு இந்த நிதியை பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதனால்தான் அன்னிய மரங்களை அகற்றி விட்டு, நாட்டு மரங்களை நட வேலை உறுதி திட்ட நிதியை பயன்படுத்த உத்தரவிட்டோம். மத்திய அரசு அதிகாரிகள், தங்கள் விருப்பம் போல ஐகோர்ட்டுக்கு இதுபோல விளக்கம் தரலாமா? வனங்களை பாதுகாக்க அதிகாரிகளுக்கு அக்கறை இல்லையா? என்று சரமாரியாக கேள்விகள் எழுப்பினர்.
அவகாசம்
பின்னர் மத்திய அரசு தரப்பில் விளக்க மனு தாக்கல் செய்ய 4 வாரம் கால அவகாசம் வழங்கி, விசாரணையை செப்டம்பர் 15-ந் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.