டிஜிட்டல் கரன்சி குறித்த செல்போன் அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம்

டிஜிட்டல் கரன்சி தொடர்பாக போலி நபர்களின் அழைப்புகள், குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-11-05 13:23 GMT

டிஜிட்டல் கரன்சி தொடர்பாக போலி நபர்களின் அழைப்புகள், குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

டிஜிட்டல் கரன்சி

மத்திய அரசு பட்ஜெட்டில் இந்த ஆண்டு டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்படும் என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். தற்போது நாம் பயன்படுத்தும் பணம் காகித வடிவத்திலும், நாணய வடிவிலும் உள்ளது.

அதேபோன்று டிஜிட்டல் கோட் பயன்படுத்தி டிஜிட்டல் கரன்சி உருவாக்கப்படுகிறது. காகித பணத்திற்கு நிகராக டிஜிட்டல் கரன்சியும் மதிக்கப்படுகிறது. இந்த டிஜிட்டல் கரன்சியை சோதனை முறையில் இந்தியாவில் ரிசர்வ் வங்கி கடந்த 2-ந் தேதி அறிமுகப்படுத்தியது.

பணம் அனுப்ப வேண்டாம்

இந்த டிஜிட்டல் கரன்சியை அரசு பங்கு பத்திரங்களில் பரிமாற்றம் செய்வதற்கு பயன்படுத்தலாம் என ரிசர்வ் வங்கி கூறி உள்ளது. இந்தநிலையில் டிஜிட்டல் கரன்சி நடைமுறையை ஆன்லைன் மோசடி நபர்கள் பணமோசடிக்கு பயன்படுத்தி கைவரிசை காட்டி வருகின்றனர். அதன்படி மர்மநபர்கள் டிஜிட்டல் கரன்சி தொடர்பாக பொதுமக்களின் செல்போனுக்கு குறுந்தகவல் மற்றும் போன் செய்து பணத்தினை பறித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக வேலூர் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு போலீசார் கூறுகையில், டிஜிட்டல் கரன்சி நடைமுறை மூலம் பணம் பரிமாற்றம் செய்து தருவதாக போன் அழைப்புகள் அல்லது குறுந்தகவல்கள் மூலம் மர்மநபர்கள் தங்களை அணுகுவார்கள். அந்த செய்திகளை நம்பி ஏமாறாதீர்கள். தங்களின் பணத்தை அவர்கள் அபகரித்து விடுவார்கள். எனவே தேவையில்லாத அழைப்புகளோ, குறுந்தகவல்களையோ நம்பி மர்மநபர்களுக்கு பணம் அனுப்ப வேண்டாம். இது தொடர்பான புகார்களுக்கு 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்