சேலத்தில் கடன் சிறப்பு முகாம்:மாணவர்கள் கல்வி கற்க பொருளாதாரம் தடையாக இருக்க கூடாதுகலெக்டர் கார்மேகம் பேச்சு

மாணவர்கள் கல்வி கற்க பொருளாதாரம் தடையாக இருக்க கூடாது என்று சேலத்தில் நடந்த கடன் சிறப்பு முகாமில் கலெக்டர் கார்மேகம் பேசினார்.

Update: 2023-10-15 20:10 GMT

சேலம்

மாணவர்கள் கல்வி கற்க பொருளாதாரம் தடையாக இருக்க கூடாது என்று சேலத்தில் நடந்த கடன் சிறப்பு முகாமில் கலெக்டர் கார்மேகம் பேசினார்.

கல்விக்கடன் முகாம்

சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான கல்விக்கடன் சிறப்பு முகாம் சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் கார்மேகம் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். மாவட்டத்தில் உள்ள 47 வங்கிகள் மற்றும் அதன் 503 வங்கி கிளைகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். காலை முதலே ஏராளமான மாணவ, மாணவிகள் திரண்டனர். பின்னர் அவர்கள் வங்கிக்கடன் அரங்கத்திற்கு சென்று கடன் சார்ந்த விவரங்களை கேட்டறிந்தனர். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, வங்கியாளர்கள் மற்றும் மாணவர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாணவர்கள் கல்விக்கடன் வேண்டி வங்கிகளுக்கு செல்லும் போது ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும், அவற்றை களைவதற்கான வழிமுறைகள் குறித்தும் கலெக்டர் கார்மேகம் அறிவுறுத்தினார்.

இந்த முகாமில், கலெக்டர் கார்மேகம் பேசியதாவது:-

நம்பிக்கை விதையாக...

வளமான சமுதாயத்தை உருவாக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். அந்த வகையில் இளைய தலைமுறையினர் கல்வியறிவில் சிறந்தவர்களாக விளங்கினால் மட்டுமே இது சாத்தியமாகும் என்பதால் அனைவருக்குமான கல்வியை வழங்குவதில் தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. கல்வி கற்க பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்ற நோக்கில் மாவட்ட நிர்வாகத்தால் கல்விக்கடன் மேளா நடத்தப்படுகிறது.

இதனை மாணவர்கள் நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். முன்னேறத் துடிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு, வங்கிகள் நம்பிக்கை விதையாக கல்விக்கடனை வழங்க வேண்டும். வங்கியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் எப்போதும் தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

அதிகாரிகள்

முகாமில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அலர்மேல் மங்கை, தனி மாவட்ட வருவாய் அலுவலர் கீதா பிரியா, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை முதுநிலை கடன் ஆலோசகர் வணங்காமுடி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவரசு, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சிவகுமார், மகளிர் திட்ட இயக்குனர் பெரியசாமி, மண்டல மேலாளர்கள் (பாரத ஸ்டேட் வங்கி), சரவணன், ராஜ்குமார் (இந்தியன் வங்கி), ராமகிருஷ்ணன் (இந்தியன் ஓவர்சீஸ் வங்கி), சோனா கல்விக்குழும தலைவர் வள்ளியப்பா, முதல்வர்கள் கார்த்திகேயன், செந்தில்குமார், காதர் நவாஷ் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கி கிளை மேலாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்