உள்நாட்டு ரப்பர் விலை உயர வாய்ப்பு

மத்திய பட்ஜெட்டில் ரப்பருக்கான இறக்குமதி வரி அதிகரிப்பால் உள்நாட்டு ரப்பர் விலை உயர வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.;

Update:2023-02-03 00:15 IST

குலசேகரம்:

மத்திய பட்ஜெட்டில் ரப்பருக்கான இறக்குமதி வரி அதிகரிப்பால் உள்நாட்டு ரப்பர் விலை உயர வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ரப்பர் விவசாயம்

குமரி மாவட்டத்தில் முக்கிய வேளாண் சார்ந்த உற்பத்தி பொருளாக ரப்பர் உள்ளது. மாவட்டத்தில் ஏறக்குறைய 25 ஆயிரம் எக்டர் பரப்பில் ரப்பர் தோட்டங்கள் உள்ளன. இதில் பெரும் பகுதி சிறு விவசாயிகளின் ரப்பர் தோட்டங்களாகும். வீட்டு வளாகங்களில் சிறிய அளவில் காலியிடங்கள் இருந்தால் கூட அதில் ரப்பர் மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளது. ஏறக்குறைய ஒரு லட்சம் பேர் ரப்பர் சார்ந்த தொழில்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ரப்பருக்கான விலை மிகவும் குறைவாக உள்ளது. இதனால் ரப்பர் விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர். ரப்பரின் விலை உள்நாட்டில் குறைந்து காணப்படுவதற்கு வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதும் ஒரு காரணம் என்று ரப்பர் விவசாயிகள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளில் ரப்பர் இறக்குமதி 57 ஆயிரம் டன்னில் இருந்து 1 லட்சத்து 14 ஆயிரம் டன்னாக அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை மட்டும் ரப்பர் இறக்குமதி 30 சதவீதம் அதிகரித்தது. காம்பவுண்ட் ரப்பர் எனப்படும் ரசாயனம் கலந்து தயாரிக்கப்படும் ரப்பரின் இறக்குமதி வரி 10 சதவீதமாகவும், சாதாரண ரப்பரின் இறக்குமதி வரி 25 சதவீதமாகவும் இருந்தது. இதனால் பெருமளவில் காம்பவுண்ட் ரப்பரே இறக்குமதி செய்யப்பட்டு வந்தது.

வரி அதிகரிப்பு

இந்தநிலையில் மத்திய பட்ஜெட்டில் வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காம்பவுண்ட் ரப்பரின் இறக்குமதி வரி 10 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து ரப்பர் இறக்குமதி பெருளமளவில் குறையும் என்றும், இதனால் உள்நாட்டில் ரப்பர் விலை அதிகரிக்கும் என்றும், அதன் மூலம் ரப்பர் விவசாயிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.

இதுகுறித்து குமரி மாவட்ட ரப்பர் விவசாயிகள் சங்க செயலாளர் சி. பாலசந்திரன் நாயர் கூறியதாவது:-

மத்திய அரசின் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு நல்ல பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக ரப்பர் விவசாயம் அதிகம் உள்ள குமரி மாவட்ட ரப்பர் விவசாயிகளுக்கும், ரப்பர் சார்ந்த தொழில்களில் ஈடுபடுவோருக்கும் நல்ல செய்தியாக ரப்பருக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு இடம் பெற்றுள்ளது.

உள்நாட்டு ரப்பர் விலை உயரும்

வெளிநாடுகளில் இருந்து காம்பவுண்ட் ரப்பர் எனப்படும் ரசாயனம் கலந்து தயாரிக்கப்பட்ட ரப்பருக்கான இறக்குமதி வரி 10 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வால் ரப்பரின் இறக்குமதி பெருமளவில் குறையும். இதனால் உள்நாட்டில் ரப்பரின் விலை உயரும். இதன் தொடர்ச்சியாக குமரி மாவட்ட ரப்பர் விவசாயிகளுக்கு அதிக நன்மைகள் ஏற்படும். மேலும் ரப்பர் விலை குறைவு காரணமாக மாவட்டத்தில் பால் ெவட்டாமல் உள்ள ரப்பர் தோட்டங்களில் பால்வெட்டும் தொழில் நடைபெறும் நிலையும் ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்