ஆதிதிராவிடர் நலத்துறை வழங்கிய பொது இடத்தை வருவாய்த்துறை ஆவணங்களில் மாற்ற கோரிக்கை
ஆதிதிராவிடர் நலத்துறை வழங்கிய பொது இடத்தை வருவாய்த்துறை ஆவணங்களில் மாற்றி வீடு இல்லாத ஆதிதிராவிட மக்களுக்கு மனைகளாக பிரித்து வழங்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது.
ஆதிதிராவிடர் நலத்துறை
புதுச்சத்திரம் ஒன்றியம் ஏளூர் ஆதிதிராவிடர் புதுக்காலனியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு ஒன்றை அதிகாரிகளிடம் கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது :-
நாங்கள் ஏளூர் கிராமம் அம்பேத்கர் நகர் புதுக்காலனியில் வசித்து வருகிறோம். 1978-ம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் தனியாரிடம் இருந்து 2.36 ஏக்கர் நிலம் வாங்கி 33 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கினர். மீதம் உள்ள இடம் எங்கள் எதிர்கால தேவைக்காக வைத்திருந்தனர்.
தொடர்ந்து 1986-ம் ஆண்டு பொது இடத்தில் இருந்து 14 பேருக்கு வீட்டுமனை வழங்கப்பட்டது. முன்பு வழங்கிய 'லே அவுட்டில்' குடியிருப்பு தேவைக்காக கடை, பூங்கா மற்றும் விளையாட்டு மைதானத்துக்கு பொது இடம் ஒதுக்கப்பட்டது. அதில் மரம், செடி வைத்து பராமரித்து வருகிறோம்.
புறம்போக்கு
இந்த நிலையில் ஒரு மாதத்துக்கு முன்பு, புதுச்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி தலைவர் உள்ளிட்டோர் வந்து எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதாக கூறி மரங்களை வெட்ட முயன்றனர். அப்போது இந்த இடம் புறம்போக்கு என்றும், அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கு கலெக்டரிடம் அனுமதி பெற்று உள்ளோம் எனவும் தெரிவித்தனர். ஆனால் 1987-ல் இருந்து, இந்த இடம் புறம்போக்கு இடமாகத்தான் உள்ளது என வருவாய் துறையினர் தெரிவித்தனர்.
ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் விலைக்கு வாங்கி எங்களுக்கு கொடுத்து இடத்தை, வருவாய் துறையினர் பின்னர் அரசு புறம்போக்கு என மாற்றி உள்ளனர். எங்களுக்கு ஒதுக்கிய பொது இடத்தை, வருவாய் துறை ஆவணங்களில் இருந்து மாற்றி வீடு இல்லாத பொதுமக்களுக்கு மனை பிரித்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இலவச வீட்டுமனை பட்டா
இதேபோல் பரமத்திவேலூர் தாலுகா சாமிநாதபுரம் காலனியை சேர்ந்த பொதுமக்கள் பொதுமக்கள் மனுவில் கூறியிருப்பதாவது:-
பரமத்திவேலூர் தாலுகா அய்யம்பாளையம் அருகே உள்ள சாமிநாதபுரம் காலனியில், 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமாக நிலம் இல்லாததால் மிகவும் சிரமப்படுகிறோம். அதனால் எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.