"தீர்மானத்தை ஆதரிக்கிறீங்களா?" சபாநாயகர் அப்பாவுவின் கேள்விக்கு வானதி சீனிவாசன் பதில்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த 2 தனித் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.;

Update:2024-02-14 13:12 IST

சென்னை,

தமிழக சட்டமன்றத்தில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இன்று விவாதம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று தொடங்கிய சட்டமன்ற நிகழ்வுகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 2 தனித் தீர்மானங்களை முன்மொழிந்தார்.

அதன்படி, 2026-ம் ஆண்டுக்கு பிறகு, மக்கள் தொகை கணக்கின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று ஒரு தீர்மானமும், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற கோட்பாடு மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்பதால், அந்த திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்த கூடாது என்று மற்றொரு தீர்மானத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். இதனைத்தொடர்ந்து 2 முக்கிய தீர்மானங்கள் மீது விவாதங்கள் நடைபெற்றன.

விவாதத்தில் பேசிய கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், பா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன், "மாநில உரிமை சார்ந்த கவலையை புரிந்துகொள்கிறோம். ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து நிறைய கேள்விகள் எழத்தான் செய்யும். ஒரே நாடு, ஒரே தேர்தலுக்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவிடம் யார் வேண்டுமானாலும் கருத்து கூறலாம்.

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை தொடர்பாக பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தனி தீர்மானத்தில் இருக்கக்கூடிய கவலைகளை, அக்கறையை புரிந்து கொண்டு பா.ஜ.க நடவடிக்கை எடுக்கும்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் அடுத்த தேர்தலிலேயே நிறைவேற்றப்போவதில்லை. சில உறுப்பினர்கள் தாங்களாகவே, தங்கள் கருத்துகளை கூறி வருகின்றனர். தேவையற்ற பயத்தால் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. நெஞ்சுக்கு நீதியில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஒரே நாடு, ஒரே தேர்தலை வலியுறுத்தி உள்ளார் என்று அவர் கூறினார்.

இதனிடையே "தீர்மானத்தை ஆதரிக்கிறீங்களா?" என சபாநாயகர் அப்பாவு அவரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த வானதி சீனிவாசன், (ஆதரவு) அந்த வார்த்தை வேணும் ஐயாவுக்கு.. என்று கூற, அவையில் சிரிப்பலை எழுந்தது. தொடர்ந்து பேசிய அவர், "உங்கள் கவலையை புரிந்து கொள்கிறோம். அதில் அக்கறை எடுத்துக் கொள்கிறோம். அதை நாங்கள் வேண்டிய இடத்தில் பேசுகிறோம்" என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்