பிளாஸ்டிக் பைகளில் உணவு பொருட்களை விற்பனை செய்யக்கூடாது
தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் உணவு பொருட்களை விற்பனை செய்யக்கூடாது.
நாகூர்:
நாகூர் வணிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நாகூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் ரவி தலைமை தாங்கினார். செயலாளர் முகமது யூசுப் நடைபெற்றுள்ள வேலைகள் குறித்து எடுத்துக்கூறினார். நாகப்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவர் செந்தில்குமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில் நாகை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசுகையில், நாகூரில் செயல்பட்டு வரும் உணவு விற்பனை நிறுவனங்கள் அனைத்தும் உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் சான்று பெற்றிருக்க வேண்டும். சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும். அச்சடிக்கப்பட்ட காகிதங்களில் பலகாரங்கள் விற்பனை செய்யக்கூடாது. தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் உணவு பொருட்களை பார்சல் கட்டி விற்பனை செய்யக்கூடாது. தடைசெய்யப்பட்ட பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருட்கள், காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. மேற்கண்ட உணவு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011-க்கு முரணாக செயல்படும் அனைத்து உணவு விற்பனை நிறுவனங்கள் மீதும் அபராதம் மற்றும் சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே அனைத்து வணிகர்களும் பொதுமக்கள் நலனுக்காக ஒத்துழைப்பு தர வேண்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார். முடிவில் பொருளாளர் சந்திரசேகர் நன்றி கூறினார்.