போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது

வாகனங்களை சாலையோரம் நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்று சுற்றுலா பயணிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2023-04-30 18:45 GMT

ஊட்டி

வாகனங்களை சாலையோரம் நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்று சுற்றுலா பயணிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

ஆய்வு கூட்டம்

நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவை முன்னிட்டு, ஓட்டல், தங்கும் விடுதிகள், பேக்கரி, உணவக உரிமையாளர்கள், நடைபாதை வியாபாரிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:-

நீலகிரி சுற்றுலா தலமாக உள்ளதாலும், கோடை சீசன் தொடங்கி விட்டதாலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். தேசிய, மாநில நெடுஞ்சாலை மற்றும் நகப்புற சாலைகளை ஒட்டி உள்ள ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் தங்கியுள்ள சுற்றுலா பயணிகளை வெளியில் அழைத்து செல்லும் பொருட்டு சுற்றுலா வாகனங்களை சாலையோரம் நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது.

தரமான உணவு

மாவட்ட நிர்வாகம் சார்பில் என்.சி.எம்.எஸ் மைதானம், ஆவின், அசெம்பிளி தியேட்டர், திபெத்தியன் வாகன நிறுத்துமிடம், பழங்குடியினர் பண்பாட்டு மையம், ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானம் போன்ற இடங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. மேலும் உணவகங்கள், பேக்கரி உரிமையாளர்கள் சுற்றுலா பயணிகளுக்கு தரமான உணவினை வழங்க வேண்டும்.

சுற்றுலா பயணிகளிடம் தங்களது வாகனங்களை உரிய பார்க்கிங் பகுதியில் நிறுத்துமாறு அறிவுறுத்த வேண்டும். சாலையோர வியாபாரிகள் நகரில் நடைபாதை கடைகள் அமைத்து பாதசாரிகள் மற்றும் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படாதவாறு செயல்பட வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குடிநீர் பாட்டில்களை சுற்றுலா பயணிகள் பயன்படுத்தக்கூடாது. குப்பைகளை வனப்பகுதிகளில் கொட்டக்கூடாது.

மருத்துவ முகாம்

உள்ளாட்சி அமைப்பின் சார்பில், அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி மற்றும் நடமாடும் கழிப்பிடங்கள் அமைத்தும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் சுற்றுலா பயணிகள் அதிகம் வரக்கூடிய இடங்களில் நடமாடும் மருத்துவ முகாம் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, ஆர்.டி.ஓ. துரைசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தனப்ரியா, வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோவை) பொது மேலாளர் நடராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்