டி.எம்.என்.எஸ். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

டி.எம்.என்.எஸ். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2023-08-11 18:45 GMT

தூத்துக்குடி டி.எம்.என்.எஸ். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.

உறுதிமொழி ஏற்பு

தூத்துக்குடி டி.எம்.என்.எஸ். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி தாளாளர் மற்றும் செயலாளர் உமரிசங்கர் வழிகாட்டுதலின் படி போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தின நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் மாரியம்மாள் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, மாணவர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகாமல் விழிப்புடன் இருக்க வேண்டும். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் குப்பைகள் பெரும் பிரச்சினையாக உள்ளது. தினமும் 180 டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன. 1000 தூய்மை பணியாளர்கள் வீடு, வீடாக சென்று குப்பையை சேகரிக்கின்றனர். நமது ஊரில் பாதாள சாக்கடை திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த கழிவுநீரை சுத்திகரித்து, அந்த தண்ணீரை கொண்டு மரம் வளர்த்து வருகிறோம். நம் நகரை சுத்தமாக வைப்பதில் அனைவருக்கும் பங்கு உண்டு. பொது இடங்களில் குப்பைகளை போடாமல், அதற்கான குப்பை தொட்டிகளில் போட வேண்டும். மாணவர்கள்தான் எதிர்கால இந்தியா. நீங்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து மாணவர்கள் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்றனர்.

ஊர்வலம்

இதனை தொடர்ந்து போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை மேயர் ஜெகன் பெரியசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி பள்ளிக்கூடத்தில் இருந்து புறப்பட்டு சண்முகபுரம், தாமோதர நகர், சிவந்தாகுளம் ரோடு, வி.இ.ரோடு வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. பேரணியில் சென்ற மாணவர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வினியோகம் செய்தனர். பேரணியில் மாணவர்கள், ஆசிரியர்கள், போலீசார் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்