பொதுமக்களுக்கு தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை - பிரேமலதா விஜயகாந்த்

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது பொதுமக்களுக்கு தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என பிரேமலதா விஜயகாந்த் குற்றஞ்சாட்டியுள்ளார்.;

Update:2022-07-03 17:40 IST

தர்மபுரி,

தர்மபுரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாளையம்புதூர், சேஷம்பட்டி, அகரம் கூட்ரோடு, தொப்பூர் கணவாய் ஆகிய பகுதிகளில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என கூறி பாளையம்புதூர் பைபாஸ் ரோட்டில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார்.

அதன் பின்னர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது,

தமிழகத்தில் பொது மக்களின் பிரச்சினைகளுக்கு முதலில் குரல் கொடுக்கும் ஒரே கட்சி தே.மு.தி.க. தான். கேப்டன் விஜயகாந்த் ஆணைப்படி ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம். தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று தே.மு.தி.க. சார்பில் பல கட்ட போராட்டங்கள் நடத்தியுள்ளோம்.

தர்மபுரி மாவட்டத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்க தி.மு.க.- அ.தி.மு.க. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தான் நக்ஸலைட்டுகள் உருவானார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே இந்த மாவட்டத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்க தொழிற்சாலைகளை கொண்டு வர வேண்டும்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் பொதுமக்களுக்கு தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. நகை கடன் தள்ளுபடி, குடும்ப பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 1000 நிதி உதவி, டாஸ்மாக் கடைகள் அடைப்பு, நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட எந்த வாக்குறுதியையும் அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்