நீட் தேர்வு பிரச்சினையில் தி.மு.க. நாடகமாடுகிறது

நீட் தேர்வு பிரச்சினையில் தி.மு.க. நாடகமாடுகிறது என முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் கூறினார்.

Update: 2023-10-24 20:31 GMT

விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் கூறியதாவது:-

அ.தி.மு.க.வில் அமைப்பு ரீதியாக 82 மாவட்டங்கள் உள்ள நிலையில் இந்த மாவட்ட பொறுப்பாளர்களை அழைத்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசி 82 ஆயிரம் பூத் கமிட்டிகளையும் முறைப்படுத்த உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். எனக்கு தர்மபுரி மாவட்டம் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பூத்கமிட்டிலும் அதிகபட்சமாக 89 பேர் இடம் பெற வாய்ப்புள்ளது. தமிழகத்தை பொறுத்தமட்டில் மிக பெரிய அமைப்பாக அ.தி.மு.க. பூத்கமிட்டிகள் தான் உள்ளது.

நீட் தேர்வு பிரச்சினையில் தி.மு.க. நாடகமாடுகிறது. தி.மு.க., காங்கிரஸ் இடம் பெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தான் நீட் தேர்வின் சட்ட வரைவு அறிமுகப்படுத்தப்பட்டது.

அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி முடிவுக்கு வந்த பின்பு சிறுபான்மையினர் அதிக எண்ணிக்கையில் அ.தி.மு.க.வில் இணைகிறார்கள். சிறுபான்மையினருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு கொடுத்தது அ.தி.மு.க. தான். தமிழகத்தில் அ.தி.மு.க. மிகப்பெரிய கூட்டணியை அமைக்கிறது. இந்த கூட்டணியில் பல கட்சிகள் வந்து இணைய வாய்ப்புள்ளது. எடப்பாடி பழனிசாமி திருமாவளவனுடனன் பேசியது நலம் விசாரிப்புக்கு தான்.

அடுத்து 6 மாதங்களுக்குள்ளோ அல்லது அதற்கு முன்போ தேர்தல் வரவுள்ள நிலையில் அ.தி.மு.க. மிகப்பெரிய வலுவான கூட்டணி அமைத்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.

பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 10 லட்சம் நிவாரண உதவியும், அரசு வேலையும் வழங்க வேண்டும். விருதுநகர் தொகுதியில் அ.தி.மு.க. வெற்றி பெற உழைப்பதற்காக தான் நான் விருதுநகரில் குடியேறி உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்