முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு மாத ஊதியத்தை வழங்கிய தி.மு.க எம்.எல்.ஏ.க்கள்...!

மிக்ஜம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.6,000 நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது.

Update: 2023-12-23 08:24 GMT

சென்னை, 

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 3 மற்றும், 4-ம் தேதிகளில் கனமழை பெய்தது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான முடிச்சூர், முகலிவாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி, மணலி, திருவொற்றியூர், அம்பத்தூர், ஆவடி, செங்குன்றம் உள்ளிட்ட பல இடங்கள் மிகவும் பாதிக்கப்பட்டன.

மேலும் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17,18ம் தேதிகளில் அதிகனமழை பெய்தது. அதிகனமழையால் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், திருநெல்வேலி, தூத்துக்குடி நகர், கிராமப்புறங்களில் மழை வெள்ள நீர் புகுந்தது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது மிக்ஜம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் கடந்த 17-ம் தேதி முதல் தலா ரூ.6,000 நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அமைச்சர்கள் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள்  தங்களது ஒரு மாத ஊதியத்தை வழங்கியுள்ளனர். 

இதில் அமைச்சர்களின் ஒரு மாத ஊதியமான ரூ.35,70,000, திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமான ரூ. 91,34,500 என மொத்தம் 1,27,04,500 ரூபாய்க்கான காசோலைகளை சட்டப்பேரவை துணைத் தலைவர் திரு. கு.பிச்சாண்டி மற்றும் அரசு தலைமைக் கொறடா முனைவர் கோவி. செழியன் ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வழங்கினர்.  

Tags:    

மேலும் செய்திகள்