தி.மு.க. சார்பில் நடந்த இலவச வேட்டி, சேலை வழங்கும் விழாவில் தள்ளு-முள்ளு

பெரியகுளம் அருகே தி.மு.க. சார்பில் நடந்த இலவச வேட்டி, சேலை வழங்கும் விழாவில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

Update: 2022-06-16 17:15 GMT

பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தில் ஒரு திருமண மண்டபத்தில் தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்தநாளையொட்டி ஏழை, எளிய மக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் விழா நடந்தது. விழாவில், தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன், பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு வேட்டி, சேலைகளை வழங்கினர். அப்போது வேட்டி, சேலை வாங்குவதற்கு தொண்டர்களும், பொதுமக்களும் முண்டியடித்து மேடை மீது ஏறினர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து தங்கதமிழ்செல்வன், சரவணக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் சிலருக்கு மட்டும் வேட்டி, சேலை வழங்கிவிட்டு மீதம் இருப்பதை நிர்வாகிகள் மூலம் வழங்குமாறு கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதையடுத்து வேட்டி, சேலை வாங்குவதற்கு மேடை மீது மக்கள் தொடர்ந்து முண்டியடித்தனர். இதனால் நிர்வாகிகள் திணறினர்.

பின்னர் வேட்டி, சேலைகள் வைக்கப்பட்டு இருந்த பெட்டிக்குள் மக்களே கைவிட்டு கிடைத்ததை எடுத்து சென்றனர். சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்டி, சேலைகளை எடுத்து சென்றனர். பலரும் வேட்டி, சேலை கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து தி.மு.க. நிர்வாகிகள் தரப்பில் கேட்டபோது, "150 பேருக்கு சேலை, 50 பேருக்கு வேட்டி வழங்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் விழாவுக்கு அதிக எண்ணிக்கையில் மக்கள் வந்திருந்தனர். வேட்டி, சேலை பெறுபவர்களுக்கு முன்கூட்டியே டோக்கன் எதுவும் வழங்கப்படவில்லை. இதனால் மக்கள் முண்டியடிக்கும் நிலைமை ஏற்பட்டது" என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்