'திருமங்கலம் ரெயில்ேவ மேம்பாலம், பஸ் நிலைய பணிகளை கிடப்பில் போட்டது தி.மு.க. அரசு தான்'-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

திருமங்கலம் ரெயில்வே மேம்பாலம், பஸ் நிலைய பணிகளை கிடப்பில் போட்டது தி.மு.க. அரசு தான் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டினார்.

Update: 2023-05-08 20:51 GMT

திருமங்கலம்,

திருமங்கலம் ரெயில்வே மேம்பாலம், பஸ் நிலைய பணிகளை கிடப்பில் போட்டது தி.மு.க. அரசு தான் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டினார்.

உறுப்பினர் சேர்க்கை முகாம்

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் கள்ளிக்குடியில் அ.தி.மு.க. சார்பில் கழக உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம் தலைமையில் நடைபெற்றது. திருமங்கலம் ஒன்றிய செயலாளர் அன்பழகன் வரவேற்றார். முகாமை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 2 ஆண்டுகளில் தி.மு.க. மக்களுக்கான எந்த திட்டங்களிலும் கவனம் செலுத்தவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறினார்கள். தற்போது 3-வது முறையாக நீட் தேர்வை மாணவர்கள் எழுதுகிறார்கள். அதற்கு உரிய தீர்வை இன்னும் அவர்கள் சொல்லவில்லை.

வளர்ச்சி பணியில் கவனம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னர் மீது சிந்தாந்த சண்டை போடுவது தேவையா? கவர்னரிடம் சண்டை போடுவதை தவிர்த்து தமிழக மக்கள் வளர்ச்சி பணியில் கவனம் செலுத்த வேண்டும். தற்போது 90 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்து இருக்கிறார்கள். ஆனால் தேர்தல் வாக்குறுதியில் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கொடுப்போம் என்று கூறினீர்களே? அதை செய்யவில்லை.

திருமங்கலம் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஏ.வ. வேலு பேசும்போது, திருமங்கலம் ரெயில்வே மேம்பாலம் அமைக்க தி.மு.க. ஆட்சியில் அந்த பணிகள் விரைவில் நடைபெறும் என்று கூறியுள்ளார். இந்த ரெயில்வே மேம்பாலம் பணிக்காக அப்போைதய முதல்-அமைச்சர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் திட்டத்தை அறிவித்தார்.

ரெயில்வே மேம்பாலம்

அதனை தொடர்ந்து ரெயில்வே துறையிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடந்த பின்பு, எடப்பாடி பழனிசாமி கடந்த 5.2.2021 அன்று அரசாணை எண் 24-ஐ வெளியிட்டு இதற்காக ரூ.17 கோடியே 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதற்காக பூமி பூஜை போடப்பட்டது. ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, 2 ஆண்டுகளாக இந்த திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன. இது குறித்து சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த போது திட்டம் பற்றி எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் பஸ் நிலையத்திற்கும் அரசாணை வெளியிடப்பட்டு, திட்ட ஒப்பந்தங்கள் கோரப்பட்டது. அதனை தொடர்ந்து தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டனர். இந்த இரு திட்டங்கள் குறித்து அரசாணையை அரசிடம் உள்ளது. அதை படித்துவிட்டு உரிய விளக்கத்தை அமைச்சர் விளக்க முன் வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில ஜெயலலிதா பேரவை துணைச்செயலாளர் வெற்றிவேல், மாவட்ட கழக துணைச்செயலாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் தமிழழகன், மாவட்ட மீனவரணி செயலாளர் சரவண பாண்டி, பொதுக்குழு உறுப்பினர் சுமதி சாமிநாதன், வாகைகுளம் சிவசக்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்