கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதி கொடுத்து, இந்தியாவிற்கே தி.மு.க. அரசு முன்னோடியாக இருக்கிறது- செல்லூர் ராஜூ தாக்கு

கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதி கொடுத்து, இந்தியாவிற்கே தி.மு.க. அரசு முன்னோடியாக இருக்கிறது என்று செல்லூர் ராஜூ கிண்டலாக கூறினார்.

Update: 2023-05-18 19:41 GMT


கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதி கொடுத்து, இந்தியாவிற்கே தி.மு.க. அரசு முன்னோடியாக இருக்கிறது என்று செல்லூர் ராஜூ கிண்டலாக கூறினார்.

சொத்துக்கள் பறிமுதல்

மதுரை மேற்கு சட்டசபை தொகுதிக்குட்பட்ட சோலை அழகுபுரம் பகுதியில் புதியதாக சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜல்லிக்கட்டு தீர்ப்பு வரவேற்கக்கூடியது. சட்ட நுணுக்கங்கள் அறிந்து அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சிறப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது. ஜல்லிக்கட்டுக்கு தடை போட்டதே தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ்தான். எம்.எல்.ஏ.க்கள் தங்களது தொகுதி நிதிகளை போராடித்தான் பெற வேண்டி இருக்கிறது. உங்கள் தொகுதியின் முதல்வன் திட்டத்தின் கீழ் 10 கோரிக்கைகள் பெறப்பட்டது. ஆனால் அது தற்போது கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது. நம்முடைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஞாபகம் மறதி ஏற்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு சொட்டு மது கூட கிடைக்காது என்று கூறினார். ஆனால் தமிழகத்தில் மது ஆறு ஓடுகிறது. கள்ளச்சாராயத்திற்கு பலர் உயிரிழந்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்தவர் இறக்க வேண்டும் என நினைக்கும் அளவுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில், சாலை விபத்தில் இறந்தால் ரூ.2 லட்சம், ரூ.3 லட்சம் கொடுக்கப்படுகிறது. ஆனால் சாராயம் குடித்தவர்களுக்கு வரலாறு காணாத அளவிற்கு ரூ.10 லட்சம் கொடுக்கப்படுகிறது. இந்தியாவுக்கே தி.மு.க. அரசாங்கம் முன்னோடியாக உள்ளது. கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு இவ்வளவு தொகை இதற்கு முன்னர் வழங்கியது இல்லை. சாராயம் வியாபாரிகள் சொத்துக்கள் பறிமுதல் செய்து அந்த சொத்தை விற்று நிதி கொடுத்திருக்கலாம். ஆனால் அரசு நிதியை கொடுத்திருக்கிறார்கள்.

மகாமகம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் ஒரு பொம்மை முதல்-அமைச்சர் என மீண்டும் உறுதி செய்து கொண்டிருக்கிறார். ஒரு மாற்றுத்திறனாளி தமிழக அரசை ஏமாற்றி உள்ளார். தி.மு.க. ஆட்சி காலத்தில் மதுரையை ஒரு தீவு போல் மாற்றி விட்டார்கள். மதுரையில் பழனிவேல் தியாகராஜனிடம் இருந்து நிதி அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதால் மதுரை மேயர் வேலை பார்க்காமல் அமைதியாக இருக்கிறார். தி.மு.க.வில் 2 கோடி தொண்டர்களை இணைப்பதாக கூறி நியாய விலை கடைகளில் ஆதார் அட்டைகளை வலுகட்டாயமாக வாங்குவதாக புகார்கள் வருகின்றன. மதுரையில் ஒரு மகாமகம் திருவிழா நடைபெறுவது போல அ.தி.மு.க.வின் பொது கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. அதற்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்