நீட் தேர்வுக்கு எதிராக திமுக அரசு புதிய வழக்கு தாக்கல் செய்துள்ளதை திசை திருப்பி பிரசாரம் செய்வதா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம்
நீட் தேர்வுக்கு எதிராக திமுக அரசு புதிய வழக்கு தாக்கல் செய்துள்ளதை திசை திருப்பும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது கண்டனத்திற்குரியது" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.;
சென்னை,
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான புதிய அரசு 07.05.2021-இல் பொறுப்பேற்றவுடன் தமிழக முதல்வர் 05.06.2021 அன்று வெளியிட்ட அறிவிப்பினை தொடர்ந்து, நீட் தேர்வு பற்றி முழுமையாக ஆராய்ந்து, தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் காப்பதற்கான பரிந்துரைகளை அரசுக்கு அளித்திட, 10.06.2021 அன்று ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், உயர் நிலைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், நீட் நுழைவுத் தேர்வு முறையிலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிப்பதற்காக, தமிழ்நாடு மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டம் 2021 என்ற சட்டமுடிவு, ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு. குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த சட்ட முன் வடிவு குறித்து, ஒன்றிய அரசால் கோரப்பட்ட விளக்கங்களுக்கு தமிழ்நாடு அரசு உரிய விளக்கம் தந்துள்ள நிலையிலும், இந்த சட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஒன்றிய அரசு மவுனம் காத்து வருகிறது. எனவே, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவின் மீது குடியரசு தலைவரின் ஒப்புதலை விரைவாக பெற்றுத் தருமாறு ஒன்றிய அரசை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உரிய சட்ட விதிகளை ஆராயாமல் அவசர கோலத்தில் நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு பதிலாக முந்தைய சட்ட விதிகளை எதிர்த்தும் மற்றும் அவற்றினை ரத்து செய்யுமாறும் குறிப்பிட்டு 04.01.2020 அன்று முந்தைய அதிமுக அரசால் உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
1956-ஆம் ஆண்டு இந்திய மருத்துவக் குழும சட்டம் மற்றும் 1948-ஆம் ஆண்டு பல் மருத்துவச் சட்டம் ஆகியவற்றிற்கு கொண்டு வரப்பட்ட சட்டதிருத்தத்தால், 2016-17-ஆம் கல்வியாண்டு முதல் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பின்னர், மேற்குறிப்பிட்ட 1956-ஆம் ஆண்டு இந்திய மருத்துவ குழும சட்டம் ஒன்றிய அரசால் திரும்பப் பெறப்பட்டு, மருத்துவப் படிப்புகளை ஒழுங்கமைக்க தேசிய மருத்துவ ஆணைய சட்டம், 2019 என்ற புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தற்பொழுது நீட் தேர்வு மற்றும் மருத்துவக் கல்வி மாணவர்கள் சேர்க்கை குறித்த பிரிவுகள் தேசிய மருத்துவ ஆணைய சட்டம், 2019-ன் படியே வரையறுக்கப்பட்டுள்ளன. ஆனால் முந்தைய அதிமுக அரசு, மேற்கண்ட மாற்றங்களை கருத்தில் கொள்ளாமல், ஏற்கெனவே ஒன்றிய அரசால் திரும்பப் பெறப்பட்ட முந்தைய சட்ட விதிகளைக் குறிப்பிட்டு உச்ச நீதிமன்றத்தில் தவறாக வழக்கத் தொடர்ந்திருந்தது.
இவ்வாறு அதிமுக அரசால் தவறான சட்டப் பிரிவுகளின் படி தொடரப்பட்ட இந்த வழக்கினை மேற்கொண்டு தொடர்ந்து நடத்தினால், அது நீட் தேர்வுக்கு எதிரான நமது போராட்டத்திற்கும், நமது மாணவர்களின் நலனுக்கும் பாதகமாக அமையும் என்று சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்தனர்.
தமிழ்நாடு அரசு மருத்துவ மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டம், 2021 குடியரசு தலைவரின் ஒப்புதலை எதிர்நோக்கியுள்ள சூழ்நிலையில், 18.01.2023 அன்று தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்ற உயர்நிலை ஆய்வுக் கூட்டத்தில், இது குறித்து உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனையின் அடிப்படையில், தேசிய மருத்துவ ஆணையச் சட்டம், 2019 இன் பிரிவு 14, இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணையச் சட்டம், 2020 மற்றும் தேசிய ஹோமியோபதிச் சட்டம், 2020 ஆகியவை முறையே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14-வது பிரிவை மீறுவதாக அறிவிக்கவும், தேசிய மருத்துவ ஆணையச் சட்டம், 2019 இன் பிரிவு 14, இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணையச் சட்டம், 2020 மற்றும் தேசிய ஹோமியோபதிச் சட்டம், 2020 ஆகியவை முறையே கூட்டாட்சிக் கொள்கைகளை மீறுவதாலும், இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பு மாற்றியமைப்பதாலும், அவற்றினை செல்லாததாக அறிவிக்கவும்,
தேசிய மருத்துவ ஆணையத்தின் முதுகலை மருத்துவக் கல்வி விதிமுறைகள், 2000 இன் விதிமுறைகள் 9 மற்றும் 9A ஆகியவை இந்திய அரசியலமைப்பின் 14 வது பிரிவு மற்றும் இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் கூட்டாட்சி கொள்கைகளை மீறுவதாக அறிவித்தும் ஆணையிடவும், 2007-ஆம் ஆண்டு பல் மருத்துவ பாடநெறி விதிமுறைகளில் I(2), I(5) மற்றும் II ஆகிய விதிமுறைகள், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவு மற்றும் கூட்டாட்சிக் கொள்கைகளை மீறுவதாக அறிவிக்கும் ஒரு தீர்ப்பு மற்றும் ஆணையை வழங்கவும்,
வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளில் பொருத்தமானது மற்றும் சரியானது என்று கருதப்படும் பிற மற்றும் கூடுதல் நிவாரணங்களை வழங்கும் ஒரு தீர்ப்பு மற்றும் ஆணையை வழங்கவும் புதிய வழக்கினை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம் எனவும், அதிமுக ஏற்கெனவே தவறான சட்ட அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருக்கும் வழக்கினை திரும்பப் பெறலாம் எனவும் முடிவெடுக்கப்பட்டது.
இம்முடிவுக்கு செயல்வடிவம் தரும் வகையில், ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த வழக்கினை திரும்பப் பெறவும், மேலும் தமிழ்நாடு அரசின் நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாடுகளை உள்ளடக்கியும், ஒன்றிய அரசின் பாதகமான சட்டவிதிகளை எதிர்த்தும் உரியவாறு புதிய வழக்கு தொடர்ந்தும் உரிய மனுக்கள் (Original Suit) இப்போது பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதிமுக அரசின் தவறான வழக்கினை திரும்ப பெற்றதை - ஏதோ நீட் தேர்வு வழக்கையே திரும்ப பெற்று விட்டது போலவும், திமுக அரசு தாக்கல் செய்துள்ள புதிய வழக்கினை மறைத்து, திசை திருப்பும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது கண்டனத்திற்குரியது.
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டு மாணவர்களுக்கு விலக்கு பெறுவது மட்டுமன்றி, பொருளாதார நிலையிலும் சமூக நீதி அடிப்படையிலும் பின்தங்கியுள்ள மாணவர்களின் எதிர்காலத்தினை பாதுகாத்திட நீட் தேர்வை அகற்றிடவும், கொள்கைபிடிப்புடனான சட்டப் போராட்டத்தினை தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடத்தி வென்றெடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.