விவசாயிகளை எதிரிகள் போல பார்க்கும் தி.மு.க.வுக்கு நாடாளுமன்ற தேர்தலில் மரண அடி கொடுங்கள் - எடப்பாடி பழனிசாமி

மத்திய மற்றும் கர்நாடக அரசுகளிடம் போராடி, வாதாடி நமது பங்கு நீரைப் பெற தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2024-01-28 17:16 GMT

தஞ்சாவூர்,

விவசாயிகளை எதிரிகள் போல பார்க்கும் தி.மு.க.வுக்கு நாடாளுமன்ற தேர்தலில் மரண அடி கொடுங்கள் என்று தஞ்சையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சை அருகே வல்லம் பிரிவு சாலையில் அ.தி.மு.க. சார்பில் 65 அடி உயர கம்பத்தில் கொடியேற்று விழா இன்று நடந்தது.

விழாவில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

இந்த கூட்டத்தை பார்க்கும்போது அடுத்து வரும் தேர்தல்களில் அ.தி.மு.க. வெற்றி உறுதி என்பதை காட்டுகிறது. இந்த இயக்கத்தை சிலர் அழிக்கவும், முடக்கவும் பார்த்த நிலையில், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அருளாசியுடன் அத்தனையும் ஒழிக்கப்பட்டு விட்டது. இந்த இயக்கத்தை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போனார்கள். தொண்டர்களால் உருவாக்கப்பட்ட அ.தி.மு.க.வில் உழைக்கிற சாதாரண தொண்டர்கள் கூட நிச்சயமாக உயர்ந்த நிலையை அடையலாம். நானும் கிளை செயலாளராக இருந்து இன்று உயர்ந்த நிலையை அடைந்துள்ளேன். இது அ.தி.மு.க.வில் தான் முடியும். வேறு எந்த கட்சியிலும் முடியாது.

தமிழக முதல்-அமைச்சர் முதலீட்டை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்றிருப்பதாக கூறுகிறார். தொழில் முதலீட்டை ஈர்க்க வேண்டுமானால், சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டிலேயே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்திருக்கலாம். கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்வதற்காக வெளிநாட்டுக்கு சென்றுள்ளார்.

காவிரி டெல்டா மாவட்டம் முப்போகம் விளைகிற பூமியாக இருந்தது. விவசாயத்துக்கு தண்ணீர் முக்கியம். ஆனால் தி.மு.க. ஆட்சியில் நீர் ஆதாரத்துக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த ஆண்டு 3 லட்சம் ஏக்கருக்கு தண்ணீர் கிடைக்காததால், பயிர்கள் கருகி விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகினர்.

ஆனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நிவாரணம் கிடைக்கவில்லை. தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.20 ஆயிரம் கொடுக்கப்பட்ட நிலையில் தி.மு.க. ஆட்சியில் ரூ.13 ஆயிரத்து 500 மட்டுமே வழங்கப்பட்டது. தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.17 ஆயிரம் கொடுக்க வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ள நிலையில், தி.மு.க. அரசு ரூ.13 ஆயிரத்து 500 மட்டுமே கொடுத்தது. அ.தி.மு.க. ஆட்சியில் டெல்டா மாவட்டங்கள், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது.

மேட்டூர் அணை திறந்து விடப்படாததால், தற்போது சம்பா, தாளடி பயிர்களுக்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. மத்திய மற்றும் கர்நாடக அரசுகளிடம் போராடி, வாதாடி நமது பங்கு நீரைப் பெற தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தாராளமாக தண்ணீர் கிடைத்து நல்ல விளைச்சலை பெற வேண்டிய விவசாயிகளுக்கு அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

பலத்த மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும், அதையும் இந்த அரசு வழங்கவில்லை. விவசாயிகளுக்கு எந்த திட்டத்தையும் இந்த அரசு கொண்டு வரவில்லை. விவசாயிகளுக்கு எந்தவித நன்மையும் செய்யாத அரசாகவே தி.மு.க. அரசு உள்ளது. விவசாயிகளை எதிரிகளை போல பார்க்கிறது. எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்து தி.மு.க.வுக்கு பாடம் புகட்ட வேண்டும்.

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத தி.மு.க.வுக்கு இந்த தேர்தலில் சரியான மரண அடியை கொடுங்கள். அது 2026 தேர்தலுக்கு அடித்தளமாக அமையும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்