திருவள்ளூரில் தி.மு.க நிர்வாகிக்கு சரமாரி அரிவாள் வெட்டு
திருவள்ளூரில் 6 பேர் கொண்ட கும்பல் தி.மு.க. நிர்வாகியை அரிலாளால் சரமாரியாக வெட்டினர். அந்த மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் ஜே.என்.சாலை, காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் பரசுராமன். தி.மு.க திருவள்ளூர் நகர துணை செயலாளராக உள்ளார். இவரது மனைவி இந்திரா திருவள்ளூர் நகராட்சி 16-வது வார்டு தி.மு.க கவுன்சிலராக உள்ளார். இவர்களது மகன் கலைவாணன் (வயது 32). திருவள்ளூர் தி.மு.க மாணவரணி துணை அமைப்பாளராக உள்ளார். இவர் திருவள்ளூர் ஜே.என் சாலையில் உள்ள அரசு ஆஸ்பத்திரி எதிரே மருந்து கடை வைத்து நடத்தி வருகிறார்.
நேற்று காலை மருந்து கடையில் இருந்தபோது 6 பேர் கொண்ட மர்ம கும்பல் கலைவாணனை அரிவாளால் தலை, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த கலைவாணன் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பொதுமக்களை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
சரமாரி அரிவாள் வெட்டு
படுகாயமடைந்த கலைவாணனை அவர்கள் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கலைவாணன் கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தி.மு.க. நிர்வாகியை அரிவாளால் வெட்டிய கும்பலை தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் மருந்து கடைக்குள் நுழைந்து வாலிபரை சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.