தி.மு.க. கவுன்சிலர்கள் போட்டி போராட்டத்தால் பரபரப்பு

தி.மு.க. கவுன்சிலர்கள் போட்டி போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-09-02 17:31 GMT

கடலூா்:

கடலூரில் இன்று மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் தி.மு.க. கவுன்சிலா்கள் பிரசன்னா, சுதா அரங்கநாதன், சுபாஷினி ராஜா, விஜயலட்சுமி உள்ளிட்டோா் பாரதி சாலையில் திடீரென அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், அமைச்சர் குறித்து அவதூறாக பேசியதை கண்டித்தும், மாநகராட்சி கூட்டத்தில் தகராறில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷமிட்டனர். அங்கிருந்த போலீசார், மறியலில் ஈடுபட்டவா்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.

கவுன்சிலர் மீது தாக்குதல்

இதற்கிடையே மாநகராட்சி கூட்டத்திற்கு வந்த 43-வது வார்டு கவுன்சிலர் பாரூக் அலியை, 42-வது வார்டு பெண் கவுன்சிலரின் கணவர் செந்தில் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து பாரூக் அலிக்கு ஆதரவாக கீதாகுணசேகரன், பிரகாஷ், ஆராமுது, கர்ணன், தமிழ்அரசன், ராதிகா பிரேம், சரத் உள்ளிட்ட 11 தி.மு.க. கவுன்சிலர்கள், மாநகராட்சி அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு உள்ள பாரதி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், 11 கவுன்சிலர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும், தங்கள் வார்டில் உள்ள எந்தவொரு கோரிக்கைகளும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்று கூறி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், பாரூக் அலியை தாக்கிய பெண் கவுன்சிலரின் கணவரை கைது செய்ய வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். இதையடுத்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

கடலூர் மாநகராட்சியில் இருகோஷ்டிகளாக உள்ள தி.மு.க. கவுன்சிலர்கள் அடுத்தடுத்து போட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்