தி.மு.க. எம்.எல்.ஏ நடத்திய மொய் விருந்தில் ரூ.11 கோடி வசூல்

பேராவூரணி தி.மு.க. எம்.எல்.ஏ. அசோக்குமார் நடத்திய மொய் விருந்தில் ரூ.11 கோடி வசூலானது

Update: 2022-08-24 21:09 GMT
தஞ்சை மாவட்டம் பேராவூரணி மற்றும் அதனைச்சுற்றி உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் அண்டை மாவட்டமான புதுக்கோட்டை மாவட்டத்திலும் கடந்த பல ஆண்டுகளாக மொய் விருந்து விழா நடத்தப்பட்டு வருகிறது. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள், வீடு கட்டுதல், விவசாய நிலங்கள் வாங்குதல், தொழில் முதலீடு, கல்வி செலவு உள்ளிட்ட பெரிய அளவில் பணத்தேவை இருக்கும் சமயத்தில் இந்த பகுதியினர் மொய் விருந்து நடத்துவது வழக்கம். குறிப்பாக ஆடி, ஆவணி மாதங்களில் மொய்விருந்து விழா என அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்கள், நண்பர்கள் என உள்ளிட்ட பலருக்கும் கொடுப்பார்கள். மொய் விருந்திற்கு வரும் அனைவருக்கும் கிடா வெட்டி கறி குழம்பு சமைத்து அசைவு விருந்து வைப்பார்கள். சாப்பிட்ட பிறகு விருந்தினர்கள் தங்களால் முடிந்த பணத்தை முறையாக தங்கள் பெயரில் மொய் விருந்து நடத்துவோரின் மொய் நோட்டில் எழுதி செல்வார்கள்.

பெரிய அளவில் வளர்ச்சி

மொய் விருந்து நடத்தியவர்கள், வசூலான பணத்தின் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வர். பணத்தேவைக்காக வங்கியிலோ, தனிப்பட்ட நபர்களிடமோ வட்டிக்கு கடனாக பணம் வாங்காமல் இருக்கவும், கஷ்டத்தில் இருக்கும் உறவுகளுக்கு கை கொடுத்து உதவவுதற்கும் தொடங்கப்பட்டதுதான் மொய் விருந்து கலாசாரம். தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த மொய் விருந்தானது இன்று பெரிய அளவில் வளர்ச்சி அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு நபர் மொய் பிடித்தால் அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அடுத்த முறை பிடிக்க வேண்டும். மொய் செலுத்தியவர் மொய் விருந்து விழா நடத்தும்போது, மொய் வாங்கியவர்கள் எழுதிய பணத்தை விட கூடுதலாக சேர்த்து திரும்ப மொய் எழுதும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

பேராவூரணி தி.மு.க. எம்.எல்.ஏ.

கஜா புயல், கொரோனா பரவல் போன்ற காரணங்களால் கடந்த 2 ஆண்டுகளாக மொய் விருந்து விழாக்கள் பெரிய அளவில் நடைபெறவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு தற்போது மீண்டும் மொய் விருந்து விழாக்கள் பழைய உற்சாகத்துடன் நடைபெற தொடங்கி இருக்கிறது. பேராவூரணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அசோக்குமார் 5 வருடங்களுக்கு முன்பு மொய் விருந்து நடத்தினார். இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மீண்டும் அவர் மொய் விருந்து நடத்தினார். பேராவூரணி-பட்டுக்கோட்டை சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் காதணி விழா மொய் விருந்து என்ற பெயரில் மொய் விருந்துக்கான ஏற்பாட்டை விமரிசையாக செய்திருந்தார்.

கமகமக்கும் கறிவிருந்து

விழாவில் 100 ஆட்டுக்கிடாய்கள் வெட்டப்பட்டு 1300 கிலோ கறியுடன் பெரிய அண்டாவில் மட்டன் குழம்பு, குடல் கூட்டு மற்றும் சோறு சமைக்கப்பட்டு இருந்தது. 200-க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு சமையல் பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவில் கலந்து கொண்டோருக்கு இலை நிறைய சோறு, கரண்டி நிறைய கறி விருந்து வைக்கப்பட்டது. ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் சாப்பிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த மொய் விருந்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். 15 ஆயிரம் பேருக்கு கமகமக்கும் கறி விருந்து பரிமாறப்பட்டது.

40 கவுண்ட்டர்கள்

மொய் விருந்து சாப்பிட்டவர்கள் மொய் எழுதினார்கள். இதற்காக பணம் எண்ணும் மெஷினுடன் 40 கவுண்ட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. குறிப்பிட்ட ஊரைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட இடத்தில் மொய் செலுத்துவதற்கு வசதியாக அந்தந்த ஊரின் பெயர்கள் அடங்கிய பதாகை மொய் எழுதும் இடத்தில் வைக்கப்பட்டிருந்தது. மொய் எழுதும் இடத்தில் துப்பாக்கி ஏந்திய தனியார் செக்யூரிட்டிகள் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். பத்துக்கு மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அந்த பகுதி முழுவதும் கண்காணிக்கப்பட்டது.

ரூ.11 கோடி வசூல்

விருந்தில் பங்கேற்றவர்கள் சாப்பிட்டு முடித்ததும் ஆயிரம் ரூபாய் தொடங்கி ரூ.5 லட்சம் வரை தங்கள் வசதிக்கேற்ப மொய் எழுதி சென்றனர். மாலையில் வங்கி அதிகாரிகள் விழா நடந்த இடத்திற்கு வந்து மொய் விருந்தில் வசூலான பணத்தை எண்ண தொடங்கினர். இதில் ரூ.11 கோடி மொய் வசூல் ஆகி இருந்தது. தனி நபர் நடத்திய மொய் விருந்தில் வசூலான தொகையில் இதுவே அதிகபட்சம் என்று தெரிவித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்