தி.மு.க. பவளவிழாவுக்கு திரண்டு வாருங்கள்

வேலூரில் 17-ந் தேதி நடைபெறும் தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழாவுக்கு திரண்டு வாருங்கள் என அமைச்சர் துரைமுருகன் பேசினார்.

Update: 2023-09-11 18:19 GMT

ஆலோசனை கூட்டம்

காட்பாடி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் காட்பாடியில் நேற்று நடந்தது. காட்பாடி வடக்கு பகுதி செயலாளர் ஜி.வன்னியராஜா தலைமை தாங்கினார். காட்பாடி தெற்கு பகுதி செயலாளரும், துணை மேயருமான எம்.சுனில்குமார் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக பொதுச்செயலாளரும், நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்காத காலத்திலேயே முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகனுக்கு காட்பாடி தொகுதியில் 60 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்தோம். இப்போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் 6 சட்டமன்ற தொகுதியில் காட்பாடி தொகுதியில் அதிக வாக்குகள் பெறுவார்கள்.

பவள விழா

வருகிற 17-ந் தேதி வேலூரில் தி.மு.க. பவளவிழா மற்றும் முப்பெரும் விழா நடைபெறுகிறது.

வரலாற்று சிறப்புமிக்க இந்த விழா வேலூர் கோட்டையில் வரலாறு படைக்கும் என முதல்-அமைச்சர் கூறியுள்ளார். அவருடைய கூற்றை மெய்பிக்கும் வகையில் நிர்வாகிகள் திரளாக விழாவிற்கு வர வேண்டும்.

நான் சாதாரண குடியானவன். 1954-ம் ஆண்டு என்னுடைய ஊரில் கட்சியை ஆரம்பித்தேன். அப்போது சத்தியவாணி முத்து தான் வந்து கட்சியை தொடங்கி வைத்தார். எங்கள் ஊரில் சாலை வசதி கிடையாது, மின்சார வசதி கிடையாது, பள்ளிக்கூடம் கிடையாது. நான் தனியாக வந்து ஒவ்வொருவரின் கரங்களையும், கால்களையும் பிடித்து வளர்ந்து இன்று பொதுச் செயலாளராக உங்கள் முன் நிற்கிறேன். இது சாதாரணமானதல்ல. எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய பதவியும் அல்ல.

அண்ணாவிற்கு பிறகு சம்பத், எம்.ஜி.ஆர்., மதியழகன், ஆசைதம்பி என பலர் பொதுச் செயலாளர் பதவிக்கு ஆசைப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு கிடைக்கவில்லை. அண்ணா, நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் அடுத்து கட்சியின் பொதுச் செயலாளராக நான் உள்ளேன். இதுதான் தி.மு.க. ஊரெல்லாம் மாநாடு, பொதுக்கூட்டம், கட்சிக் கூட்டங்கள் நடந்தால் நான் தான் தலைமை தாங்க வேண்டும். நான் பிறந்த ஊரிலேயே இருபெரும் விழா நடக்கிறது. அதற்கு நான் தலைமை தாங்க உள்ளேன்.

பொதுச் செயலாளராக அழைக்கிறேன்

இந்த விழாவிற்கு ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் திரளாக வர வேண்டும். நீங்கள் தான் எனக்கு தாய், தந்தை. பவள விழா மற்றும் முப்பெரும் விழாவிற்கு பொதுச் செயலாளராக அழைக்கிறேன். திரண்டு வாருங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் எம்.பி.க்கள் ஜெகத்ரட்சகன், கதிர்ஆனந்த், வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் முகமதுசகி உள்பட பலர் பேசினர்.

ஒன்றிய செயலாளர்கள் சரவணன், தணிகாசலம், ரவி, மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா, மாநகராட்சி கவுன்சிலர்கள் கே.அன்பு, சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆய்வு

இதையொட்டி, கந்தனேரி பகுதியில் விழா மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணியை அமைச்சர் துரைமுருகன் நேற்று இரவு ஆய்வு செய்தார். அப்போது விழா ஏற்பாடுகள் குறித்து நந்தகுமார் எம்.எல்.ஏ. அமைச்சருக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் கூறுகையில் மணியம்மையை, பெரியார் திருமணம் செய்ததால், தி.மு.க. உருவானதற்கு வேலூர் காரணமாக இருந்தது. அந்த வேலூரில் தி.மு.க.வின் பவள விழா நடக்கிறது என்றார்.

கார்த்திகேயன் எம்.எல்.ஏ, அனைக்கட்டு ஒன்றியக் குழு தலைவர் பாஸ்கரன், பள்ளிகொண்டா பேரூராட்சி மன்ற தலைவர் சுபபிரியாகுமரன், ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேசன், சீதாராமன், பள்ளிகொண்டா நகர செயலாளர் ஜாகிர் உசேன், துணைத் தலைவர் வசிம்அக்ரம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்