வாலிபரை அரிவாளால் வெட்ட துரத்திய தி.மு.க. கவுன்சிலரின் கணவர் கைது

வாலிபரை அரிவாளால் வெட்ட துரத்திய தி.மு.க. கவுன்சிலரின் கணவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-08-11 20:07 GMT

சமயபுரம்:

தி.மு.க. கவுன்சிலரின் கணவர்

திருச்சி மாவட்டம் சிறுகனூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட தெற்கு தத்தமங்கலம் குடித்தெருவை சேர்ந்தவர் வெற்றிச்செல்வன் (வயது 38). அப்பகுதி தி.மு.க. கிளை செயலாளராக உள்ள இவர், கண்ணியாகுடியில் டாஸ்மாக் கடை அருகே உள்ள பாரை நடத்தி வருகிறார். இவரது மனைவி நித்யா மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய தி.மு.க. கவுன்சிலராக உள்ளார்.

இந்நிலையில் வெற்றிச்செல்வனுக்கு, அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலத்தின் மகன் குணசேகரன் (35) கடந்த 2020-ம் ஆண்டு ரூ.2 லட்சம் கடனாக கொடுத்திருந்ததாக கூறப்படுகிறது. அந்த பணத்தை திருப்பித் தருமாறு வெற்றிச்செல்வனிடம் குணசேகரன் தொடர்ந்து கேட்டு வந்துள்ளார். ஆனால் அவர் பணம் தராமல் இருந்ததாக கூறப்படுகிறது.

வீடியோ காட்சி வைரல்

இதேபோல் நேற்று முன்தினம் பணத்தை திருப்பி கேட்டபோது, அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் வெற்றிச்செல்வன் ஆத்திரமடைந்து வீட்டில் இருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு, திட்டிக்கொண்டே குணசேகரனை வெட்டுவதற்கு துரத்தி சென்றுள்ளார். இதனால் குணசேகரன் அங்கிருந்து தப்பி ஓடியதாக தெரிகிறது.

தத்தமங்கலம் மெயின்ரோட்டில் நடந்த இந்த சம்பவத்தை அப்பகுதி மக்கள் அச்சத்துடன் வேடிக்கை பார்த்துள்ளனர். மேலும், வெற்றிச்செல்வன் அரிவாளை எடுத்துக் கொண்டு குணசேகரனை ஓட, ஓட விரட்டும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

கைது

இதுபற்றி தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், குணசேகரன் சிறுகனூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நேற்று வெற்றிச்செல்வனை கைது செய்தனர்.

கொடுத்த கடனை திருப்பி கேட்டவரை தி.மு.க. கவுன்சிலரின் கணவர் அரிவாளால் வெட்ட துரத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்