தமிழகத்தின் கடனை ரூ.7½ லட்சம் கோடியாக மாற்றியதுதான் தி.மு.க. அரசின் சாதனை சிவகங்கையில் அண்ணாமலை பேச்சு

தமிழகத்தின் கடனை ரூ.7½ லட்சம் கோடியாக மாற்றியதுதான் தி.மு.க. அரசின் சாதனை என சிவகங்கையில் அண்ணாமலை பேசினார்.;

Update:2023-08-01 00:30 IST


தமிழகத்தின் கடனை ரூ.7½ லட்சம் கோடியாக மாற்றியதுதான் தி.மு.க. அரசின் சாதனை என சிவகங்கையில் அண்ணாமலை பேசினார்.

சிவகங்கையில் நடைபயணம்

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நேற்று ராமநாதபுரம் மாவட்ட நடைபயணத்தை முடித்துக்கொண்டு, மாலை 6 மணி அளவில் சிவகங்கை வந்தார். அம்பேத்கர் சிலை பகுதியில் இருந்து நடைபயணத்தை தொடங்கிய அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி மற்றும் பா.ஜனதா. நிர்வாகிகள், தொண்டர்கள் உடன் நடந்து வந்தனர்.

பின்னர் வீரமாகாளி கோவில் வழியாக மதுரை ரோடு, நெல் மண்டி தெரு, கோட்டை முனியாண்டி கோவில் தெரு, காந்திவீதி வாரச்சந்தை ரோடு வழியாக பஸ் நிலையத்தை அடைந்தனர். அங்கு திறந்தவேனில் நின்றபடி அண்ணாமலை பேசியதாவது:-

சிறையில் உள்ள செந்தில்பாலாஜிக்கு இலாகா இல்லாத அமைச்சர் பதவி, அரசு ஊழியம், இதர வசதிகள் செய்து கொடுத்துள்ளனர். எந்த வேலையுமே செய்யாமல் சிறையில் இருந்தபடியே சம்பளம் வாங்கும் ஒரே நபர் செந்தில்பாலாஜி தான்.

ரூ.3 லட்சத்து 52 ஆயிரம் கடன்

இந்த ஆட்சி தொடர்ந்து நீடித்தால் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் நமக்கு நம்முடைய உடை மட்டும் தான் மிஞ்சும். தமிழகத்தில் இன்றைய அரசு வாங்கிய கடன் மட்டும் ரூ.7 லட்சத்து 53 ஆயிரம் கோடி. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் நாம் ஒவ்வொருவருக்கும் ரூ.3 லட்சத்து 52 ஆயிரம் கடன் உள்ளது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி. இப்போது தமிழக அரசு வாங்கிய கடனை வட்டியுடன் கட்டி முடிக்க 27 ஆண்டுகள் ஆகும். குஜராத் மாநிலத்தில் பிறக்கும் ஒரு குழந்தைக்கு ரூ.7500 வரவாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் பிறக்கும் ஒரு குழந்தைக்கு ரூ.3 லட்சத்து 52 ஆயிரம் கடன் உள்ளது.

தமிழகத்தில் 5,500 மதுபான கடைகள் உள்ளது. இதனுடைய வருமானம் கடந்த ஆண்டு ரூ.35 ஆயிரம் கோடியாக இருந்தது. தற்போது ரூ.44 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. இன்னும் பாக்கெட்டுகளில் மதுபானம் விற்பனை வந்தால் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலை ஏற்படும்.

அமலாக்கத்துறை

சிவகங்கை தொகுதியில் கிராபைட் தொழிற்சாலை கொண்டு வரப்படவில்லை. ஆத்தங்குடி டைல்ஸ் பற்றி கவலைப்படவில்லை. மத்திய அரசு இன்னும் 3 மாதத்தில் ஆத்தங்குடி டைல்ஸ்க்கு புவிசார் குறியீடு வழங்க உள்ளது. இந்த தொகுதியின் எம்.பி. ஊழல் நிறைந்த எம்.பி.யாக உள்ளார். ஒரே குடும்பத்தில் தந்தை, தாய், மகன் ஆகிய 3 பேருக்கும் அமலாக்கத்துறை விசாரணை நடப்பது இங்குதான். இந்த தொகுதியில் 2024-ல் பா.ஜ.க. கூட்டணி சேர்ந்தவர் தான் எம்.பி.யாக வரவேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் மருதுபாண்டியர்களின் ஊரிலிருந்து எடுத்துவரப்பட்ட மண்ணை மூத்த தலைவர் எச்.ராஜா, பொதுக்குழு உறுப்பினர் சொக்கலிங்கம் ஆகியோர் அண்ணாமலையிடம் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்