தி.மு.க., பா.ஜ.க.வினர் போலீசில் புகார்
பழனியில் கட்சி பேனர்கள் கிழிக்கப்பட்டதை அடுத்து தி.மு.க., பா.ஜ.க.வினர் போலீசில் புகார் அளித்தனர்.;
தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமிக்கு தி.மு.க. சார்பில் 'கலைஞர் விருது' வழங்கப்பட உள்ளது. இதையொட்டி பழனியில், அமைச்சரை வாழ்த்தி தி.மு.க.வினர் பேனர்கள் வைத்துள்ளனர். அதேபோல் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் நடைபயணத்தை பழனியில் இன்று (சனிக்கிழமை) மேற்கொள்கிறார். இதையொட்டி பா.ஜ.க. நிர்வாகிகள் சார்பிலும் பழனி நகரின் பல இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் பழனி பஸ்நிலைய பகுதியில் வைத்திருந்த பா.ஜ.க. பேனரும், திண்டுக்கல் சாலை பகுதியில் இருந்த தி.மு.க. பேனரும் சேதப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக 2 கட்சிகளின் சார்பிலும் பழனி போலீசில் புகார் செய்யப்பட்டது.
இந்நிலையில் பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன் சார்பில், நகராட்சி அலுவலகத்தில் கடிதம் ஒன்று வழங்கப்பட்டது. அதில், பழனியில் சட்டம், ஒழுங்கை பாதிக்கும் வகையிலும், அனுமதியின்றியும் வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற வேண்டும். இதற்கு போலீஸ் சார்பில் போதிய பாதுகாப்பு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.