தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்
மின்கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மத்திய, மாநில அரசுகளின் மின்கட்டண உயர்வு மற்றும் உணவுபொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி உயர்வை கண்டித்து தே.மு.தி.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜலபதி தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் ராஜ்குமார், ஒன்றிய செயலாளர் பக்கம் சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பாலு வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கும் வகையில் உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். அரிசி, கோதுமை, தயிர் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மீது விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், சீர்காழி நகரசபை உறுப்பினர் வக்கீல் ராஜசேகர் உள்பட கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து கோரிக்கைகள் அடங்கிய மனு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டது.