கட்சி துண்டு அணிந்து வாக்களிக்க வந்த தேமுதிக வேட்பாளர் அனுமதி மறுப்பு - பரபரப்பு...!
கட்சி துண்டு, வேட்டியுடன் வாக்களிக்க வந்த தேமுதிக வேட்பாளருக்கு தேர்தல் அதிகாரி அனுமதி மறுத்தார். இதையடுத்து கட்சி அடையாளத்தை அகற்றிவிட்டு அவர் வாக்களித்தார்.
ஈரோடு,
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்கை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேமுதிக வேட்பாளர் ஆனந்த் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வந்தார். அப்போது, அவர் தேமுதிக கட்சி துண்டு, வேட்டியுடன் வந்ததால் அவரை வாக்குச்சாவடிக்குள் நுழைய தேர்தல் அதிகாரி அனுமதி மறுத்திவிட்டார்.
இதனால், தேர்தல் அதிகாரியிடன் தேமுதிக வேட்பாளர் ஆனந்த் சிறிது வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், கட்சி அடையாளங்களுடன் வாக்குச்சாவடிக்குள் வரக்கூடாது என்று தேர்தல் அதிகாரி அறிவுரை கூறினார்.
இதனை தொடர்ந்து கட்சி அடையாளத்தை வெளிப்படுத்தும் கட்சி துண்டு, வேட்டியை மாற்றிவிட்டு அவர் வாக்குச்சாவடிக்கு வந்தார். பின்னர் அவர் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, தேமுதிக வேட்பாளர் ஆனந்த் தனது வாக்கை பதிவு செய்தார்.