பெரிய ஊராட்சி ஒன்றியம், ஊராட்சிகளை பிரிக்க வேண்டும்

தமிழகத்தில் மிகப் பெரியதாக உள்ள ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் ஊராட்சிகளை 2 ஆக பிரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் ரமேஷ் தெரிவித்தார்.

Update: 2022-06-04 18:17 GMT

சிவகங்கை, 

தமிழகத்தில் மிகப் பெரியதாக உள்ள ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் ஊராட்சிகளை 2 ஆக பிரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் ரமேஷ் தெரிவித்தார்.

வரவேற்பு குழு கூட்டம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் 10-வது மாநில மாநாடு சிவகங்கையில் நடைபெற உள்ளது. இதையொட்டி வரவேற்புகுழு கூட்டம் மாவட்ட தலைவர் வேலுச்சாமி தலைமையில் நடைபெற்றது. ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் மாநில தலைவர் ரமேஷ், அலுவலர் சங்கத்தின் பொதுச் செயலாளர் குமரேசன், முன்னாள் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன், மாநில பொருளாளர் விஜயபாஸ்கர், மாநில துணைத்தலைவர் திருவேந்தன், மாநில செயலாளர் செல்வ குமார், மாநில துணை தலைவர்கள் பாஸ்கர், பாபு, காந்திமதிநாதன், பழனியப்பன், சவுந்தரபாண்டியன் மற்றும் மாநில நிர்வாகிகள் ராஜசேகர், புகழேந்தி, ஜம்ரூத் நிஷா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நடவடிக்கை

பின்னர் மாநில தலைவர் ரமேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் 10-வது மாநில மாநாடு வருகிற ஆகஸ்டு மாதம் 5 மற்றும் 6-ந் தேதி சிவகங்கையில் நடைபெறுகிறது. மாநாட்டில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்கிறார்கள்.

10-வது மாநில மாநாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களின் சமூக நீதியை நிலை நிறுத்தவும் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு உதவவும் நடத்தப்படும் மாநாடாக அமையும். தமிழகத்தை பொறுத்தவரை மிகப்பெரிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரித்து அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது.

2 ஆக பிரிப்பு

இதேபோல தமிழகத்தில் உள்ள 385 ஊராட்சி ஒன்றியங் களில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றியங்கள் மிகப்பெரியதாக உள்ளது. எனவே அவற்றை 2 ஆக பிரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல தமிழகத்தில் 12,525 ஊராட்சிகள் உள்ளன. இவைகளில் பெரியதாக உள்ள ஊராட்சிகளை 2 ஆக பிரித்து ஒரு வருவாய் கிராமத்திற்கு ஒரு கிராம ஊராட்சி என கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சிகளில் பயன்படுத்தப்பட வேண்டிய நிதிகளை அரசு பயன்படுத்தக்கூடாது. அவைகளை உள்ளாட்சிகளிலேயே பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரத்து

இதேபோல ஊழியர்களுக்கும் நிதி வழங்காததால் சம்பளம் போட முடியவில்லை. எனவே மத்தியஅரசு உடனடியாக பணத்தை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் கடந்த ஆட்சி காலத்தில் பணிஇடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் மாநில தலைவரின் பணியிடை நீக்கத்தை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்