வெள்ளாளப்பட்டியில் நிர்வாகத்திற்கு இடையூறு:ஊராட்சி தலைவர் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியல்

வெள்ளாளப்பட்டியில் நிர்வாகத்திற்கு தனிநபர்கள் இடையூறு செய்வதால் ஊராட்சி தலைவர் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-01-30 21:30 GMT

கருப்பூர்,

சேலம் கருப்பூர் அருகே உள்ள வெள்ளாளப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக சியாமளா பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் ஊராட்சி நிர்வாகத்திற்கு தனி நபர்கள் அடிக்கடி தொந்தரவு செய்வதாகவும், இதனால் பணிகள் பாதிக்கப்படுவதாகவும் கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கருப்பூர்-வெள்ளாளப்பட்டி சாலையில் ஊராட்சி மன்ற தலைவர் சியாமளா தலைமையில் துணைத்தலைவர் தங்கராசு, சியாமளாவின் கணவர் ராமச்சந்திரன், தூய்மை பணியாளர்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும், கருப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி, மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் ஊராட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அப்போது கோரிக்கை தொடர்பாக புகார் கொடுத்தால் உடனே நடவடிக்கை எடுப்பதாக இன்ஸ்பெக்டர் தமிழரசி உறுதி அளித்தார். இதைஏற்று சமாதானம் அடைந்த தலைவர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அந்த சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்