மாவட்ட அளவிலான நெடுந்தூர ஓட்டப்போட்டி
கடலூரில் மாவட்ட அளவிலான நெடுந்தூர ஓட்டப்போட்டியை கலெக்டர் அருண் தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அரசு விளையாட்டு துறை வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் விளையாட்டு கட்டமைப்புகள் மற்றும் உலக தரத்திலான விளையாட்டு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடம் விளையாட்டு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மாரத்தான் போட்டிக்கு இணையான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி நடத்திட அரசு ஆணையிட்டுள்ளது.
அதன்படி கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி, போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நெடுந்தூர ஓட்டப்போட்டி
இந்த போட்டியானது 17 முதல் 25 வயது வரை உள்ள மாணவர்களுக்கு 8 கி.மீ. தூரமும், மாணவிகளுக்கு 5 கி.மீ. தூரமும் நடத்தப்பட்டது. அதேபோல் 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ. தூரமும், பெண்களுக்கு 5 கி.மீ. தூரமும் என தனித்தனியாக நெடுந்தூர ஓட்டப்போட்டி நடத்தப்பட்டது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு ஓடினர்.
நிகழ்ச்சியில் அய்யப்பன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுந்தரி, துணை மேயர் தாமரைச்செல்வன், போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மதுபாலன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.