வள்ளியூர், அம்பையில் மாவட்ட தலைமை ஆஸ்பத்திரி; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

வள்ளியூர், அம்பையில் மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிகள் அமைக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Update: 2022-09-23 21:19 GMT

வள்ளியூர், அம்பையில் மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிகள் அமைக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

திறப்பு விழா

நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பல்வேறு புதிய கட்டிடங்கள் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். டீன் ரவிச்சந்திரன் வரவேற்று பேசினார். கலெக்டர் விஷ்ணு, ஞானதிரவியம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நயினார் நாகேந்திரன், ரூபி மனோகரன், மேயர் பி.எம்.சரவணன் ஆகியோர் பேசினார்கள்.

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு, 'ரிமோட்' மூலம் புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். அதாவது, பருத்திப்பாடு, கடம்போடு வாழ்வு ஆகிய 2 இடங்களில் தலா ரூ.20 லட்சத்தில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

தீவிர அறுவை சிகிச்சை பிரிவு

மேலும் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில், குடல் மற்றும் சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள மிக சிறிய பிரச்சினைகளை துல்லியமாக கண்டறியும் வகையில் ரூ.1.73 கோடி மதிப்பிலான பிளோரோஸ்கோபி டிஜிட்டல் கருவி, நுண்கதிர் துறையில் ரூ.72.55 லட்சம் மதிப்பிலான டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி ஆகியவற்றை பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார். இதுதவிர 10 படுக்கைகள் கொண்ட தீவிர அறுவை சிகிச்சை பிரிவு, 12 படுக்கை வசதியுடன் கூடிய அதிநவீன குழந்தைகள் காய்ச்சல் பிரிவு ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

700 படுக்கை வசதி

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி மூலம் தினமும் 200 நோயாளிகள் பயன் அடைவார்கள். மேலும் ஆஸ்பத்திரியை விரிவாக்கம் செய்யும் வகையில் புதிய கட்டுமானத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 8-ந்தேதி அடிக்கல் நாட்டினார். இதன்மூலம் 700 படுக்கை வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த பணி முடிந்த பிறகு ஒரு நாளைக்கு 1,000 வெளி நோயாளிகளும், 600 உள் நோயாளிகளும் பயன் அடைவார்கள்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவிப்பில் நெல்லை மாவட்டத்துக்கு அதிகமான திட்டங்கள் வழங்கப்பட்டு உள்ளது. பழவூர், மூலக்கரைப்பட்டி, அத்தாளநல்லூர், கூத்தன்குழி ஆகிய இடங்களில் ரூ.2.37 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகள்

மாவட்டத்திற்கு ஒன்று என்ற அடிப்படையில் அரசு தலைமை ஆஸ்பத்திரி அமைக்கப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசி பிரிக்கப்பட்டு விட்டதால், புதிதாக ஒரு அரசு தலைமை ஆஸ்பத்திரி அமைக்க கோரிக்கைகள் வந்துள்ளது. ஆனால் நெல்லை மாவட்டத்தில் 2 மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிகள் அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்து உள்ளார். வள்ளியூரில் ரூ.45 கோடியில் ஆஸ்பத்திரி அமைக்க நிலம் தேர்வு பணி நடந்து வருகிறது. இதேபோல் அம்பையில் ரூ.45 கோடியில் தற்போது உள்ள ஆஸ்பத்திரி தரம் உயர்த்தி மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியாக மேம்படுத்தப்படும்.

நாங்குநேரி தொகுதியில் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே 2 ஆஸ்பத்திரிகள் அமைக்கப்படுவதால், நாங்குநேரி 4 வழிச்சாலையில் ரூ.10 கோடியில் விபத்து சிகிச்சை மையம் அமைக்கப்படும். அந்த மையம் மாவட்ட அரசு ஆஸ்பத்திரி அந்தஸ்துக்கு படிப்படியாக தரம் உயர்த்தப்படும். இதுதவிர உதயத்தூரில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையமும், நெல்லை டவுனில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையமும் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

காய்ச்சல் முகாம்

முன்னதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாளையங்கோட்டை வி.எம்.சத்திரத்தில் நடைபெற்ற காய்ச்சல் கண்டறியும் முகாமை பார்வையிட்டார்.

நிகழ்ச்சிகளில் முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், தி.மு.க. மாநகர அவைத்தலைவர் சுப.சீதாராமன் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்