அறையில் தண்ணீர் பிடித்து வைப்பதில் தகராறு: நண்பரை கொன்ற வாலிபர் கைது

திருப்பூரில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் டிரைவரை கத்தியால் குத்தி கொலை செய்த நண்பரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-07-08 06:18 GMT

திருப்பூர்,

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை திருவே கம்பத்து பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 29). திருப்பூர் கொங்கு மெயின் ரோடு திருநீலகண்டபுரம் பகுதியில் உள்ள நூல் கடையில் ஆட்டோ டிரைவராக வேலை செய்து வந்தார். அதே கடையில் மற்றொரு வாகனத்தின் டிரைவராக காரைக்குடியை சேர்ந்த வசந்த் (24) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர்களுடன் மேலும் 4 பேர் என 6 பேரும் திருநீலகண்டபுரத்தில் ஒரே அறையில் தங்கி உள்ளனர்.

ஆனந்தராஜ் மற்றும் வசந்த் இருவருக்கும் அறையில் தண்ணீர் பிடித்து வைப்பதில் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. விடுமுறை நாளான நேற்று இருவரும் மது போதையில் இருந்தபோது தண்ணீர் பிடிக்காமல் இருந்துள்ளனர். ஆனந்தராஜ் தண்ணீர் பிடித்து வைக்க வேண்டும். ஆனால் அவர் தண்ணீர் பிடித்து வைக்காததால் ஆத்திரமடைந்த வசந்த், ஆனந்தராஜுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

தங்கி இருந்த அறைக்கும் முன்பு இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வசந்த், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ஆனந்தராஜின் நெஞ்சு மற்றும் வயிறு பகுதிகளில் சரமாரியாக குத்தியதாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த ஆனந்தராஜ் தனது ஆட்டோவை நோக்கி சென்று நடுரோட்டில் சரிந்து விழுந்து இறந்தார். இதைக்கண்ட பொதுமக்கள் உடனடியாக வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு மாநகர துணை போலீஸ் கமிஷனர் ராஜராஜன், உதவி கமிஷனர் அனில்குமார் உள்ளிட்டோர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அருகில் இருந்த கடையின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றினர். தொடர்ந்து அக்கம்,பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

உடனடியாக போலீசார் துரிதமாக செயல்பட்டு வசந்த்தை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். வசந்தை வடக்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர். ஆனந்தராஜின் உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தண்ணீர் பிடித்து வைப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒரே அறையில் இருந்த நண்பனை கத்தியால் குத்தி வாலிபர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்