2,600 டன் உர மூட்டைகளை கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பும் பணி
உர மூட்டைகளை கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பும் பணி நடந்தது.
குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து 2,600 டன் கிரிப்கோ யூரியா உர மூட்டைகள் நேற்று ரெயில் மூலம் சேலத்திற்கு வந்தது. சேலம் சத்திரம் ரெயில் நிலையத்திற்கு வந்த அந்த உர மூட்டைகளை லாரிகள் மூலம் ஏற்றி சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை, பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தனியார் உரக்கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பணிகளை சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சேலம் மாவட்டத்திற்கு வரப்பெற்ற 650 டன் உரங்கள் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்ப்டடுள்ளது. சேலம் மாவட்டத்தில் இதுவரை 1,123 டன் யூரியாவும், பொட்டாஷ் 569 டன், டி.ஏ.பி. உரம் 610 டன், காம்ப்ளக்ஸ் உரம் 2,103 டன் ஆக மொத்தம் 4,405 டன் உரங்கள் விவசாயிகளுக்கு வழங்க சேலம் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் தற்போது இருப்பு உள்ளது எனவும், தேவைப்படும் விவசாயிகள் உரத்தை பெற்று பயன்பெறுமாறு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.