இலங்கை அகதிகளுக்கு வீடு கட்டும் டெண்டரை ரத்து செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி

இலங்கை அகதிகளுக்கு வீடுகள் கட்டித்தரும் திட்டத்திற்கான டெண்டர் அறிவிப்பை ரத்து செய்யக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.;

Update:2022-07-21 01:53 IST

இலங்கை அகதிகளுக்கு வீடுகள் கட்டித்தரும் திட்டத்திற்கான டெண்டர் அறிவிப்பை ரத்து செய்யக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அகதிகளுக்கு வீடு

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுசிலா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழக அரசு சார்பில் மாநிலம் முழுவதிலும் உள்ள இலங்கை அகதிகளுக்கு வீடுகள் கட்டித்தரப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இலங்கை அகதிகளுக்கான வீடுகள் கட்டுவது தொடர்பாக அறிவிப்பாணை வெளியாகி உள்ளது. இதற்கான பணிகளும் தொடங்கப்பட்டு உள்ளன.

அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் புதூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தாப்பாத்தி கிராமத்தில் இலங்கை அகதிகள் முகாம் அமைத்து அங்கு 24 வீடுகள் கட்டுவதற்கான ஆன்லைன் டெண்டர் அறிவிப்பாணையை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ளார்.

டெண்டரை ரத்து செய்ய மனு

இந்த டெண்டர் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளின் காரணமாக உள்ளூர் காண்டிராக்டர்கள் அந்த டெண்டரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உள்ளூர்காரர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்படும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது.

எனவே, இலங்கை அகதிகளுக்கு முகாம் அமைத்து வீடுகள் கட்டுவதற்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் பிறப்பித்த பேக்கேஜ் இ-டெண்டர் அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

பஞ்சாயத்துக்கு தொடர்பில்லை

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, இலங்கை அகதிகளுக்கு வீடுகள் கட்டித்தர சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி இதற்கான டெண்டர்கள் விடும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த திட்டத்திற்கான நிதியையும் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

இந்த திட்டம் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் செயல்படுத்தக்கூடிய திட்டமாக கொண்டு வரப்பட்டுள்ளது. இது பஞ்சாயத்துக்கு உட்பட்டவர்கள் நிறைவேற்றக்கூடியது இல்லை. இந்த திட்டத்திற்கும் பஞ்சாயத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே மனுதாரர் கோரிக்கை ஏற்புடையதல்ல. இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதாடினார்.

வழக்கு தள்ளுபடி

இதனையடுத்து நீதிபதி, பஞ்சாயத்து நிதியில் இருந்து இலங்கை அகதிகள் முகாமிற்கு நிதி செலவிடப்படவில்லை. இதற்காக அரசு தனியாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. எனவே, இதில் கோர்ட்டு தலையிட முடியாது. இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்