கூடுதல் விலைக்கு மது விற்ற விற்பனையாளர் பணியிடை நீக்கம்
கூடுதல் விலைக்கு மது விற்ற விற்பனையாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
தா.பேட்டை அருகே மேட்டுப்பாளையத்தில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த மதுபான கடையில் விற்பனையாளராக திருச்செல்வம் வேலை செய்து வந்துள்ளார். இந்தநிலையில் மது பிரியர் ஒருவர் டாஸ்மாக் கடையில் இரண்டு பீர் பாட்டில்களை வாங்கியுள்ளார். அப்போது விற்பனையாளர் மதுபாட்டில்களுக்கு ரூ.20 சேர்த்து வாங்கியதாக கூறப்படுகிறது. இதனை அந்த மதுபிரியர் திருச்சி டாஸ்மாக் நிர்வாகத்தில் புகார் செய்தார். அதன் பேரில் விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்த விற்பனையாளரை டாஸ்மாக் உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் மது பிரியரிடம் டாஸ்மாக் விற்பனையாளர் கூடுதல் பணம் வாங்கும் வீடியோ வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது.