2 ஆண்டு டிப்ளமோ படித்தவர்கள் கிராமப்புறங்களில் மருத்துவ சேவைக்கு அனுமதி கேட்ட வழக்கு தள்ளுபடி

2 ஆண்டு டிப்ளமோ படித்தவர்கள் கிராமப்புறங்களில் மருத்துவ சேவைக்கு அனுமதி கேட்ட வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு.

Update: 2023-04-07 20:48 GMT

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், கணேசன் உள்பட பலர் தாக்கல் செய்துள்ள மனுவில், "சமூக மருத்துவ சேவை மற்றும் அத்தியாவசிய மருந்தகம் என்ற 2 ஆண்டு டிப்ளமோ படிப்பை முடித்துள்ளோம். நாங்கள் ஒருபோதும் டாக்டர்கள் என்று சொல்லிக் கொண்டது கிடையாது. ஆனால் நாங்கள் படித்த படிப்பின் அடிப்படையில் மருத்துவம் செய்வதை அதிகாரிகள் தடுக்கின்றனர்'' என்று கூறியிருந்தனர்,

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், "தாங்கள் கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார சிகிச்சை மையம் நடத்த உரிமை உள்ளது'' என்று வாதிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு கூடுதல் பிளீடர், மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்தால் மட்டுமே இதுபோன்ற மருத்துவ சேவைகளை செய்ய முடியும். ஏற்கனவே, ஐகோர்ட்டு மதுரை கிளையில் இதுபோன்ற கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கவுன்சில் உள்ளிட்ட அமைப்புகளில் ஏதாவது ஒரு அமைப்பில் மனுதாரர்கள் பதிவு செய்து, அனுமதி பெற்றால் மட்டுமே மருத்துவ சேவை வழங்க முடியும். அதுபோன்ற அனுமதி இல்லாமல், தமிழ்நாடு முழுவதும் மனுதாரர்கள் மருத்துவ சேவைகளை வழங்க முடியாது. மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது'' என்று உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்